கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு விவகாரத்தில், கொலையை குறைத்து மதிப்பிடவும், கொலையை மறைக்க முயற்சித்ததிலும், கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ்க்கும், காவல்நிலைய அதிகாரிக்கும் முக்கிய பங்கு இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை கையாள்வதில் காவல்நிலைய அதிகாரிக்கு, கல்லூரி முதல்வர் அறிவுரைகளை வழங்கியதன் மூலம் தொடர்பில் இருந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஆர் ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் தலா காவல்நிலைய அதிகாரி அபிஜித் மொண்டல் ஆகியோரை சிபிஐ சனிக்கிழமை கைது செய்தது. ஞாயிற்றுக்கிழமை (15 செப்), இருவரையும் சீல்டாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ இருவரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
நீதிமன்றத்தில் சிபிஐ சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், “கைது செய்யப்பட்டுள்ள தலா காவல்நிலைய அதிகாரி மீது இன்னும் குற்றம்சாட்டப்படவில்லை. ஆனால், இந்த குற்றத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். ஆர் ஜி கர் மருத்துவமனையில் நடந்த சம்பவம் தொடர்பாக தலா காவல்நிலையத்திற்கு காலை 10.03 மணிக்கே தகவல் கிடைத்துள்ளது.
இரு இடங்களுக்கான பயண நேரம் 5 நிமிடங்களாக இருந்தபோதும், காவல்நிலைய அதிகாரி காலை 11 மணியளவிற்கே அந்த இடத்திற்கு சென்றுள்ளார். இரவு 11.30 மணியளவில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம், காவல்நிலைய அதிகாரி சந்தீப் கோஷுடன் பல முறை பேசியுள்ளார். காவல் நிலைய அதிகாரிக்கு சில பொறுப்புகள் உள்ளன. அது அவருக்கும் தெரியும். ஆனால், அவர் சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும், கல்லூரி முதல்வர் மற்றும் காவல்நிலைய அதிகாரி இருவரும், குற்றம் நடந்த இடத்தை சேதப்படுத்தியும், ஆதாரங்களை அழித்தும், விதிகளை மீறி செயல்பட்டு விசாரணையில் ஈடுபட்டவர்களை தவறாக வழிநடத்தியுள்ளனர் என தெரிவித்தார்.
காவல் நிலைய அதிகாரியின் இதுதொடர்பாக கூறுகையில், “சம்பவம் தொடர்பாக தாமதமாக எஃப்ஐஆர் பதிவு செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்காக அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்படலாம். ஆனால், இந்த தவறுக்காக அவரை கைது செய்யமுடியாது. சிபிஐ விசாரணைக்காக முழுமையாக ஒத்துழைத்தார். மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட, விசாரணைக்கு அழைப்பு வந்தபோது அவர் ஆஜரானார்” என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், செப்டம்பர் 17 அவரை இருவரையும் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
தற்போது, பாலிகிராப் சோதனை மற்றும் குரல் பகுப்பாய்வு போன்ற விசாரணைகளில் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஏமாற்றும் வகையில் பதில்களை அளித்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில், போராட்டத்தில், மருத்துவர்களுடன், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், முன்னாள் பள்ளி மாணவிகள், பொதுமக்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மாநில அரசு மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. தலைமை செயலாளர் மனோஜ் பந்த் பயிற்சி மருத்துவருக்கு அனுப்பிட மின்னஞ்சலில், மாலை 5 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.