உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு வியாபாரி நேற்று பேஸ்புக் நேரலையின்போது தனது மனைவியுடன் விஷம் அருந்தினார், ஜிஎஸ்டியால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், பிரதமர் மோடி வியாபாரிகளின் நலனை காக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெறும் நகரங்களில் ஒன்றான பாக்பத்தை சேர்ந்த காலணி வியாபாரியான ராஜீவ் தோமர் என்பவர் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார், அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது, ஆனால் அவரது மனைவி இறந்துவிட்டார்.
தேர்தலுக்கு முன்னதாக வைரலாகி வரும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்த 2 நிமிட வீடியோவில், ராஜீவ் தோமர் ஒரு பையிலிருந்து மருந்தினை எடுத்து விழுங்க முயல்கிறார், அனால் அவரது மனைவி அதை தடுக்க முயல்கிறார், அதையும் மீறி அவர் விழுங்கிய பிறகு துப்ப வைக்கவும் முயல்கிறார், ஆனால் முடியவில்லை. அதன்பின்னர் அவரும் அந்த மருந்தினை சாப்பிட்டதாக தெரியவருகிறது.
அவர்களை பேஸ்புக்கில் நேரலையில் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு போன் செய்ததால், அவர்கள் வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 38 வயதான பூனம் தோமர் மருத்துவமனையில் உயிரிழந்தார். ராஜீவ் தோமர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பேஸ்புக் நேரலையில் பேசிய ராஜீவ் தோமர், "எனக்கு பேச சுதந்திரம் இருக்கிறது, நான் வாங்கிய கடனை அடைப்பேன். நான் இறந்தாலும் கடனை செலுத்துவேன். ஆனால் இந்த வீடியோவை முடிந்தவரை அனைவரும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் தேச விரோதி அல்ல, ஆனால் எனக்கு நாட்டின் மீது நம்பிக்கை உள்ளது. நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதனை சொல்ல விரும்புகிறேன், நீங்கள் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் நலன் விரும்புபவர் அல்ல. உங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள். ஜிஎஸ்டி வரியால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் " என்று கண்ணீருடன் கூறினார்.
இது குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, "பாக்பத்தில் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி தற்கொலை முயற்சி மற்றும் அவரது மனைவியின் மரணம் பற்றி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். குடும்ப உறுப்பினர்களுக்கு எனது அனுதாபங்கள். ராஜீவ் ஜி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உ.பி முழுவதும் சிறு வணிகர்கள், வியாபாரிகள் மத்தியில் இதுபோன்ற துயரங்களை நாங்கள் காண்கிறோம். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் பொதுமுடக்கம் ஆகியவை அவர்களை மிகவும் பாதித்துள்ளன" என தெரிவித்தார்