இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என மக்களவையில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் உரிய இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்க வேண்டும் எனவும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மழைக்காலக் கூட்டத் தொடரில் முதல் முறையாக, செவ்வாயன்று, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர்முழக்கம் நிறுத்தப்பட்டு, இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மசோதா, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தயாரிக்க மற்றும் மாற்றம் செய்ய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்பதை தெளிவுபடுத்துவதால், எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. தமிழகம்,
மேற்குவங்காளம், ஒரிசா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பிராந்திய கட்சிகளின் ஆட்சி நடக்கும்நிலையில், "அரசியல் சாசனம் 127வது திருத்தம்" மசோதாவை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.இதனாலேயே மழைக்கால கூட்டத்தொடரில் 15 நாட்களாக தொடர்ந்த முழக்கங்களை நிறுத்திக்கொண்டு, மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் மசோதாவை விளக்கி, மக்களவையில் ஆதரவு கோரினார். மசோதா மீது தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்களும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
அமைச்சர் வீரேந்திர குமாரின் பதிலுக்கு பிறகு மசோதா, மக்களவையின் ஒப்புதலை பெற்றது. அதேவேளையில், மாநிலங்களவையில் அமளி தொடர்ந்தது. குறிப்பாக உணவு இடைவேளைக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் தீவிரமடைந்ததால், தொடர்ந்து ஒத்திவைப்புகள் நடந்தன.