கேரளாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியான சோக நிகழ்வு நேற்று இரவு நடந்தது. இந்த விபத்தில் மேலும் சிலர் உயிரிழந்திருக்க கூடும் என்பதால் அவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படையின் ஹெலிகாப்டரை கொன்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பரப்பனன்குடியில் பயன்பாட்டில் உள்ள சுற்றுலா படகுகள் தளத்தில் தற்போது கோடை விடுமுறை என்பதால் பலரும் ஆர்வத்துடன் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு அடுக்குகள் கொண்ட டபுள் டெக்கர் படகொன்று அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் சென்றதாக சொல்லப்படுகிறது.
அடுத்த சில நிமிடங்களில் தண்ணீரில் தள்ளாடியுள்ளது அந்த படகு. அப்போதே யாரும் எதிர்பாராதவிதம் தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அது. இந்த படகில் சுமார் 40 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடந்தன. இன்று காலை நிலவரப்படி 22 பேர் வரை உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. இன்னும் பலர் மீட்கப்படாமல் இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இந்திய கடற்படையின் சேடக் ஹெலிகாப்டர், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியை பார்வையிட்டு வருகிறார். அவருடன் கேரள வனத்துறை மற்றும் வனவிலங்கு அமைச்சர் ஏ.கே.சசீந்திரனும் உள்ளார்.