உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 121ஆக அதிகரித்துள்ளது. இதில் ஐந்து குழந்தைகளும் அடக்கம்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் போலே பாபா என்ற ஆன்மீக சொற்பொழிவாளர் சத்சங்கத்தை அரங்கேற்றுவதற்காக, கொல்கத்தா ஹைவேஸ் சாலையை ஒட்டி இருந்த வயல்வெளிக்கு அருகாமையில் மேடை ஒன்றை அமைத்திருக்கிறார். இந்த நிகழ்வை காண்பதற்காக 60,000 முதல் 80,000 பேர் வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் சொற்பொழிவை கேட்பதற்காக இரண்டரை லட்சம் மக்கள் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தை கட்டுப்படுத்த முன் ஏற்பாடு வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. மேலும், அப்பகுதியில் மழை பெய்து இருந்ததால் வயல் மண் வழுக்கும் நிலையில் இருந்து இருக்கிறது.
போலே பாபாவின் சொற்பொழிவு நிறைவடைந்ததும், அவரின் காலடி மண்ணை சேகரிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக அவ்விடத்திற்கு சென்றுள்ளனர். இதில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இவர்களை தடுக்க வந்த தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை மக்கள் தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. பலருக்கும் தீவிர சிகிச்சைகள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் விபத்திற்குப் பின் தலைமறைவான போலே பாபாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.