மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்காததால் ஏற்படும் கொரொனா மரணங்கள் இனப்படுகொலைக்கு குறைவானது அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பான வழக்கு ஒன்றில், “மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்காததால் ஏற்படும் கொரோனா நோயாளிகளின் மரணங்கள் ஒரு கிரிமினல் செயல். திரவ மருத்துவ ஆக்சிஜனின் தொடர்ச்சியான விநியோகச் சங்கிலியை உறுதி செய்வதற்கான பணியை ஏற்றுக்கொண்டவர்களின் இச்செயல் இனப்படுகொலைக்கு குறைவானது அல்ல” என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் “ போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பதாக அரசாங்கத்தால் கூறப்படும் தகவலுக்கு மாற்றாக இப்போது வெளிவரும் புகைப்படங்களை காண்கிறோம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், வாக்கு எண்ணும் பகுதிகள் மற்றும் மையங்களின் சி.சி.டி.வி காட்சிகளை நிர்ணயிக்கப்பட்ட அடுத்த தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கொரொனா நெறிமுறை மற்றும் வழிகாட்டுதல்களை தெளிவாக மீறியுள்ளதாக சி.சி.டி.வி காட்சிகளிலிருந்து கண்டறிந்தால், அது சம்பந்தமாக ஒரு செயல் திட்டத்தை கொண்டு வருவோம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.