அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் தொடர்ந்து பெற ஆதார் எண்ணை கட்டாயம் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது. நலத்திட்டங்களை பெறுவதற்கான அவகாசம் வரும் 31ம் தேதியுடன் முடிவதாக இருந்தது. இதை நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மீது இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அந்தக் கால அவகாசத்தை ஜூன் 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி ரேஷன் , 100 நாள் வேலை திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றுக்காக ஆதார் எண்ணை ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டியிருக்கும். ஆதாரை இணைக்கவில்லை என்பதற்காக உண்மையான பயனாளிக்கு பலன் கிடைக்காமல் போகக் கூடாது என்பதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும் மொபைல் ஃபோன் எண், வங்கிக் கணக்கு எண், காப்பீடு உள்ளிட்டவற்றுக்கு ஆதாரை இணைப்பதற்கு அவகாசம் ஆதார் தொடர்பான வழக்கு முடியும் வரை கால வரையறை இன்றி ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ளது.