பீகாரில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்ட சடலத்தின் இடது கண் மாயமாகியுள்ளது. இந்நிலையில், அதனை எலி கடித்து சென்றிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி, பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த பன்துஷ் குமார் என்ற நபர், அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச்சூட்டிற்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நாளந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அன்றிரவே உயிரிழந்தார்.
இரவு நேரம் என்பதால், பிரேதப்பரிசோதனை செய்யப்படாமல் ஐசியூ படுக்கையில் சடலம் வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து, அடுத்தநாள் காலை பன்துஷ்குமாருக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்பு, உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் பன்துஷ் குமாரின் இடது கண் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டதற்கு, “அந்த கண்ணை எலிகள் கடித்திருக்கலாம்” என்று மருத்துவர் பினோத் குமார் சிங் அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
மருத்துவர் பினோத் இதுகுறித்து ஊடகங்களில் தெரிவிக்கையில், “எலிகள் பன்துஷ்ஷின் இடது கண்ணை கடித்திருக்கலாம் என்று டாக்டர்கள் குழு சந்தேகிக்கின்றது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தீவிரமான பிரச்னைதான். ஒருவேளை இதில் ஊழியர்கள் / வெளிநபர்கள் யாரேனும் ஈடுபட்டிருந்தால், அக்குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பவம் தொடர்பான அனைத்து அம்சங்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். கண் எப்படி பிடுங்கப்பட்டது என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும். இது தொடர்பாக ஆலங்கரை காவல்நிலையத்திலும் மருத்துவமனை நிர்வாகம் முறைப்படி புகார் அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், பன்துஷ் குமாரின் உறவினர்கள் இது குறித்து தெரிவிக்கையில், “பிணவறையிலிருந்து சடலம் கொண்டு வரப்பட்டபோது, சடலத்தின் இடது கண் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அச்சயமத்தில், உடலின் அருகில் இருந்த ஸ்ட்ரெச்சரில் அறுவைசிகிச்சை பிளேடு இருந்ததை நாங்கள் கண்டோம்” என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த ஆலம்கஞ்ச் காவல் நிலையத்தின் அதிகாரி ராஜீவ் குமார், “மருத்துவமனை நிர்வாகம் அளித்த முறையான புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். மேலும், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடமும், இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் குடும்பத்தினர் தரப்பில் இதுவரை எந்த புகாரும் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து அலட்சியம் காட்டிய குற்றச்சாட்டின் பேரில், சடலத்தின் கண் காணாமல் போனதாக சொல்லப்படும் நேரத்தில் பணியில் இருந்த இரண்டு செவிலியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளோம் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் மங்கள் பாண் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இது தொடர்பான விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனை கேமராவில் இது தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா? கண்கள் பிடுங்கப்பட்டதா? இல்லை உண்மையாகவே எலிகள்தான் கடித்ததா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.