நாம் வாங்கும் உணவுப் பொருட்களில் பூச்சிகள், புழுக்கள் கிடப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் பதிவிடும் வீடியோக்களை இணையதளங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. வந்தே பாரத் ரயில்களில் வழங்கப்பட்ட உணவுகளில் கரப்பான் பூச்சி, நகம் கிடந்தது முதல் ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்தது வரை என இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். இன்னும் சிலருக்கு ஆன்லைன் உணவுகளின்போது புழுக்கள் வந்ததும், சமீபத்தில் ஐஸ் கிரீம் ஆர்டரின்போடு விரல் வந்ததும்கூட வைரலான செய்திகள்.
இந்த நிலையில், குஜராத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் ஒன்றில், செத்துப்போன தவளை இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகர் புஷ்கர் தாம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் படேல். இவர், நேற்று (ஜூன் 18) தன்னுடைய 4 வயது உறவுக் குழந்தைக்கு அருகிலுள்ள கடையில் இருந்து ‘பொட்டேட்டோ வேஃபர்ஸ்’ எனப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதைப் பிரித்து அதில் இருந்த சில சிப்ஸ்களை அந்தக் குழந்தையும் அவரது மருமகளும் சாப்பிட்டுள்ளனர். அப்போது பாக்கெட்டில் இறந்த தவளையை பார்த்த மருமகள், பொட்டலத்தைத் தூக்கி எறிந்துள்ளார்.
இதுகுறித்து அவர், ஜாஸ்மின் படேலிடம் தெரிவிதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த சிப்ஸ் நிறுவனமான பாலாஜி வேஃபர்ஸிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். அதன்பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின், முதற்கட்ட விசாரணையில் சிதைந்த நிலையில் தவளை ஒன்று கிடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிப்ஸ் பாக்கெட்டுகளின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் இறந்த தவளை கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.