காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் முடிவுகளால் பாஜகவுக்கு லாபமா?! - ஒரு பார்வை

காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் முடிவுகளால் பாஜகவுக்கு லாபமா?! - ஒரு பார்வை
காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் முடிவுகளால் பாஜகவுக்கு லாபமா?! - ஒரு பார்வை
Published on

ஜம்மு - காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் முடிவுகள் மூலம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததையும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மூன்று இடங்களில் வென்றதையும் பேசி வருகிறது பாஜக. இந்த முடிவுகள் சொல்ல வருவது என்ன? - இதோ ஒரு விரிவான பார்வை...

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்பான மாவட்ட வளர்ச்சி மன்றத்துக்கு கடந்த மாதம் 28–ம் தேதி தொடங்கி இம்மாதம் 19-ம் தேதிவரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மாவட்ட வளர்ச்சி மன்றத்தின் 280 இடங்களுக்கு நடந்த இந்தத் தேர்தலில் 2,181 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அமைதியாக நடந்த இந்தத் தேர்தலில் 51 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்தத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி, அவாமி தேசிய மாநாடு கட்சி உள்பட 7 கட்சிகள் இணைந்து ஃபரூக் அப்துல்லா தலைமையிலான 'குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி' எனும் பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்ட நிலையில், ஃபரூக் அப்துல்லா தலைமையிலான குப்கர் கூட்டணி பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதேவேளையில், பாஜகவும் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருக்கிறது.

மொத்தமுள்ள 280 இடங்களில், 7 கட்சிகளின் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க. 75 இடங்களையும், சுயேச்சைகள் 50 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 26 இடங்களையும், ஆப்னி கட்சிக்கு 12 இடங்களையும், மக்கள் ஜனநாயக முன்னணியும், தேசிய சிறுத்தைகள் கட்சியும் தலா 2 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் வென்றுள்ளன.

கடந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதற்குப் பின் நடந்த முதல் ஜம்மு - காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி மன்றம் என்னும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன் முடிவுகள் யாருக்கு சாதகம், களநிலை என்ன என்பதை தெளிவாகப் பார்ப்போம்.

மக்கள் கூட்டணி!

ரத்து செய்யப்பட்ட காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெரும் நோக்கில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி, அவாமி தேசிய மாநாடு கட்சி உள்பட 7 கட்சிகள் தங்களின் பழைய பகையை மறந்து ஃபரூக் அப்துல்லா தலைமையிலான குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியாக இணைந்தனர். இந்தக் கூட்டணி ஒன்றாக தேர்தலை சந்தித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்தக் கூட்டணி தலைவர்கள் குறிவைக்கப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துடன் தொடர்புடைய பண மோசடி குற்றச்சாட்டுகளுக்காக அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணை வளையத்தில் ஃபரூக் அப்துல்லா சிக்கியது, பயங்கரவாத நிதியளிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) மூத்த பிடிபி தலைவர் வாகீத் பர்ரா கைது செய்யப்பட்ட விவகாரம், இதனால் மெகபூபா முப்திக்கு வீட்டுச் சிறை, ரோஷினி ஊழல் என பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் பிரசாரங்களை மேற்கொண்டனர். சில தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டனர். ஆனால் அதையும் மீறி ஜம்மு - காஷ்மீரின் அடையாளம், சுயாட்சி, சிறப்பு அந்தஸ்து ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் இந்தக் கூட்டணி தேர்தலை சந்தித்தது.

இதன் பலனாக தேர்தல் முடிவுகளில், குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி (PAGD) தனது கருத்தை உரத்தக் குரலிலும், தெளிவாகவும் வெளிப்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டணி மிகச் சிறப்பாக செயல்பட்டு 110 இடங்களை தன் வசமாக்கியுள்ளது. ஜம்மு பிரிவில் உள்ள 10 மாவட்டங்களில் 4 மாவட்டங்களையும், காஷ்மீர் பிரிவில் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்பது மாவட்டங்களையும் இந்தக் கூட்டணி வென்றுள்ளது. இந்த வெற்றியானது, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீரில் மத்திய அரசு செய்த அனைத்தையும் நிராகரிப்பதாகவும், சிறப்பு அந்தஸ்தையும், மாநிலத்தன்மையையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு கிடைத்த ஆதரவாகவுமே பார்க்கப்படுகிறது.

370வது பிரிவு ரத்துக்கு பின் காஷ்மீரில் பாஜக லாபம் ஈட்டியுள்ளதா?!

மேலோட்டமாக பார்த்தால் இந்தத் தேர்தல்களில் பாஜக மிகப் பெரிய இடங்களைப் பெற்றுள்ளது உண்மைதான். ஆனால், பாஜக அதிகபட்ச இடங்களுக்கு போட்டியிட்டது என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். இந்து மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய ஜம்மு பிராந்தியத்தில் பாஜக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில், காஷ்மீர் பிராந்தியத்தில் மூன்றே இடங்களில்தான் பாஜக வென்றுள்ளது. ஸ்ரீநகர், பந்திபோரா, புல்வாமா மாவட்டங்களில் தலா ஓர் இடங்களில்தான் பாஜகவின் வெற்றி. பாஜக வெற்றி பெற்ற இடங்கள் மட்டுமில்லாமல், மற்ற கட்சிகள் வென்ற இடங்களிலும் பேசும் அரசியலும் மதம் மட்டுமே.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காஷ்மீர் பிராந்தியத்தின் 10 மாவட்டங்களில் 96.4% மக்கள் முஸ்லிம்கள் உள்ளனர், அதே சமயம் ஜம்முவின் மக்கள் தொகையில் 62.6% இந்துக்கள் உள்ளனர். ஜம்முவில் இந்து மக்கள் அதிகம் உள்ள மாவட்ட 56 இடங்களில் பாஜக 86% வென்றுள்ளது. அதேநேரத்தில் முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள 152 இடங்களில் 2% மட்டுமே வென்றது. அதேபோல், குப்கர் கூட்டணி முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் 57% இடங்களை வென்றுள்ளது. இந்து மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் வெறும் 4% மட்டுமே வெற்றி.

காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தத் தேர்தலில் மூன்று இடங்களை பாஜக வென்றது என்றாலும், இதை சட்டமன்றம் அல்லது மக்களவைத் தேர்தலில் வென்றதை ஒப்பிட முடியாது, ஏனெனில், உள்ளாட்சி அமைப்பான டிடிசி பிரிவுகள் மிகச் சிறியவை. மேலும், டி.டி.சி தேர்தல்கள் முதல் முறையாக நடத்தப்பட்டதால், முந்தைய தேர்தல்களுடன் எந்த ஒப்பீடும் செய்ய முடியாது. 2014 சட்டமன்றம் மற்றும் 2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்கு சதவீதம் காஷ்மீர் பிராந்தியத்தில் பாஜகவுக்கு ஒரு தவிர்க்க முடியாத இடத்தை கொடுக்கின்றன.

இந்தத் தேர்தல் மூலம் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்ததையும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மூன்று இடங்களில் வென்றதையும் பேசி வருகிறது பாஜக. ஆனால், இந்தத் தேர்தல்களில் முக்கியமானது, மாவட்டங்களை வெல்வதுதான். அதை கனகச்சிதமாக குப்கர் கூட்டணி செய்து முடித்திருக்கிறது. குப்கர் கூட்டணியின் வெற்றி, அதன் பாதையில் வீசப்பட்ட அனைத்து தடைகளையும் உடைத்து பெறப்பட்டது. முடிவுகள், அரசாங்கத்தை எழுப்புவதற்கான ஓர் ஒலியாக இருக்கக்கூடும். குறிப்பாக, இந்தத் தேர்தல்களில் "ஜனநாயகம் தான் உண்மையான வெற்றியாளர்" என்று சத்தமாக அறிவித்திருப்பது, ஒட்டுமொத்தமாக ஜம்மு - காஷ்மீரில் மத்திய அரசு நீக்கிய சிறப்பு அந்தஸ்தையும், மாநிலத்தன்மையையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற குப்கர் கூட்டணியின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

அதேவேளையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி எப்படிப்பட்ட வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கும் இந்த முடிவுகள் துணைபுரிந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com