மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்துப் பேசப் போவதாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் கூறியிருந்தார். எனினும், ஸ்வாதி மாலிவாலுக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்திருந்தது. ஆனால், தடையை மீறி ஸ்வாதி மாலிவால் கடந்த ஜூலை 23ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தார்.
இந்த நிலையில், ஸ்வாதி மாலிவால் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களை இன்று சந்தித்தார். அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கட்டியணைத்து ஆறுதல் கூறும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பின்னர் அங்குள்ள நிலைமை குறித்து மாலிவால், “அந்த வீடியோ என்னை உலுக்கியது. நான் அவர்களை எப்படியும் சந்திக்க விரும்பினேன். அவர்களின் குடும்பங்களைச் சந்திப்பதற்காக சுராசந்த்பூருக்குச் செல்வது மிகவும் கடினம் என கிராமவாசிகள் தெரிவித்தனர். ஆனாலும் பாதுகாப்பு ஏதுமின்றி அங்கு செல்ல முடிவு செய்தேன்.
வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரண்டு பெண்களின் குடும்பங்களை நான் சந்தித்தேன். ஒரு பெண்ணின் கணவர் ராணுவ வீரராக இருந்தபோது நாட்டின் எல்லையை பாதுகாத்தார். இதுவரை யாரும் அவரைச் சந்திக்க வரவில்லை. அவரை முதலில் அணுகியது நான் மட்டும்தான். மணிப்பூரில் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்களுக்கும் அரசிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை; இழப்பீடும் வழங்கப்படவில்லை. அவர்கள் இருவரும் இன்னும் அதிர்ச்சியிலேயே உள்ளனர்.
மணிப்பூரில் நடக்கும் வன்முறை மிகவும் கவலையளிக்கிறது. நான் செல்லும் இடமெல்லாம் மனதை உலுக்கும் சம்பவங்கள்தான் காதில் விழுகின்றன. மக்கள் பலரும் வீடுகளையும் உறவினர்களையும் இழந்துள்ளனர், அவர்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. வீடியோவில் வந்த பாதித்தவர்களை தவிர மற்றவர்களையும் சந்தித்தேன். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் என்னால் இங்கு வரமுடிகிறபோது, முதல்வரோ, மற்றவர்களோ ஏன் இங்கு இதுவரை வரவில்லை. நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பெண்களும் குழந்தைகளும் ஓர் இறுக்கமான சூழ்நிலையிலேயே வாழ்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.