18-வது மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம் மாநிலத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமங் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
இவருடைய மனைவியான கிருஷ்ண குமாரி ராயும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் களமிறக்கப்பட்டார். இதில் அவர், எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் பிமல் ராயை தோற்கடித்தார்.
இதையடுத்து, நேற்று சட்டசபையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், கிருஷ்ண குமாரி ராய் எம்எல்ஏவாக பதவியேற்றார். இந்த நிலையில், கிருஷ்ண குமாரி ராய் இன்று திடீரென தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகி உள்ளது. அவரது இந்த திடீர் முடிவுக்கான காரணம் தெரியவில்லை. கிருஷ்ண குமாரி ராயின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பிரேம் சிங் தமங், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பதவியேற்புக்கு சென்றுள்ள நிலையில், அவரது மனைவி ராஜினாமா செய்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிகாஷ் பாஸ்நெட் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கிருஷ்ண குமாரி ராய் தனது கணவர், முதல்வர் ஒப்புதலின் பேரில்தான் ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர் ராஜினாமா செய்தது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர், பல ஆண்டுகளாக அத்தொகுதிக்காக உழைத்து வருகிறார்.
அரசியல் ரீதியாக அந்தத் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்துதான் அந்தத் தொகுதி அவருக்கு வழங்கப்பட்டது. கிருஷ்ணா ராய் தற்போது எம்.எல்.ஏ. என்ற பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார்” என அதில் தெரிவித்துள்ளார்.
சிக்கிமில் கிருஷ்ண குமாரி ராய் ராஜினாமா செய்திருப்பதை அடுத்து, அந்த தொகுதிக்கு விரைவில் மறு தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. மேலும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிக்கு 1 எம்.எல்.ஏ. குறைந்துள்ளது.