தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
மருத்துவ கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையிலான தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மக்களவையில் கடந்த வாரம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவரப்படும். அந்த ஆணையத்துக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக மருத்துவ ஆலோசனை குழு அமைக்கப்படும்.
இந்த மசோதா நேற்று மக்களவையில் விவாதிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேபோல், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அதிமுக தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை அதிமுக எதிர்ப்பதாக மக்களவையில் ரவீந்திரநாத் குமார் எம்.பி தெரிவித்துள்ளார். தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை மக்களுக்கு எதிரானது என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார். எனினும் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இந்நிலையில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய மருத்துவ சங்கம் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ராஜன் ஷர்மா, “இந்த மசோதா மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் இம் மசோதா பணக்காரர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அத்துடன் இது ஊழலுக்கு வழிவகுக்கம் விதத்தில் அமைந்துள்ளது. ஆகவே இதனை எதிர்த்து நாளை நாங்கள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.