கோயிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்ததற்காக பட்டியலின பிரிவை சேர்ந்த சிறுவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள தொம்கேரா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஓம் பிரகாஷ். இவரது மகன் விகாஷ் குமார் ஜாதவ் (17). இவர் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தங்கள் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த மற்ற சமூகத்தை சேர்ந்த சிலர் அந்த சிறுவனை தடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி விகாஷ் கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்தவுடன் அவரை அங்கிருந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக விகாஷ் பெற்றோர் காவல்துறையிடம் புகார் கொடுத்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்த விகாஷை மாற்று சமூகத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் வீட்டிற்குள் புகுந்து இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர் விகாஷை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் விகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த இளைஞர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர் என விகாஷின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள காவல்துறையினர், இளைஞர்கள் விளையாடும்போது இருதரப்பிடையே சண்டை ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக விகாஷ் சுடப்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். அத்துடன் தப்பி ஓடிய இளைஞர்களை கைது செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.