உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
என்னதான் சாதிகள் இல்லையென்று எழுத்திலும் பேச்சிலும் சொல்லப்பட்டாலும், நாடு முழுவதும் சாதிரீதியிலான இழிவுகள் அரங்கேறி வருகின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். குறிப்பாக, ஆணவக்கொலைகளை எடுத்துக்காட்டலாம். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆணவக் கொலைகள் அரங்கேறி உள்ளன. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் வேங்கைவயல் சம்பவம் அதிர்ச்சியான அந்த உண்மையை உணர வைத்தது. இந்த நிலையில், ஆக்ராவில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர், உயர்வகுப்பினர் என்று சொல்லப்படும் சமூகத்தினரால் தாக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 24 வயதான மணமகன் ஒருவருக்கு, கடந்த மே 4ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றன. அப்போது திருமண ஊர்வலத்தின்போது மணமகனும் மற்றவர்களும் சோஹல்லா ஜாதவ் பஸ்தி நகர்ப் பகுதி வழியாகச் சென்றபோது உயர்சாதியினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சதர் பஜார் காவல் நிலையத்தில் மணமகனின் மாமியார் கீதா ஜாதவ், கடந்த மே 8ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கீதா ஜாதவ், ”என்னுடைய மருமகனான அஜய் ஜாதவ்வுக்கு சம்பவத்தன்று திருமண வரவேற்பு நடைபெற்றது. சோஹல்லா பஸ்தி வழியாக அவர்கள் சென்றபோது, உயர்சாதியினரைச் சேர்ந்த சிலர், அவர்களை வழிமறித்து நிறுத்தியதுடன், ’இப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமுதாயத்த்டைச் சேர்ந்த மணமகன்கள் தங்களுடைய திருண வரவேற்பின்போது குதிரையில் ஏறி ஊர்வலம் செல்வதில்லை. நீங்கள், எப்படி ஏறியுள்ளீர்கள்’ எனக் கேட்டு மிரட்டியதோடு, அவரை குதிரையிலிருந்தும் இறக்கி உள்ளனர்.
தொடர்ந்து அவர்களைத் தாக்கிய அந்தக் கும்பல், திருமண மண்டபம் வரை துரத்திச் சென்று அங்குள்ளவர்களையும் தாக்கி உள்ளனர். மேலும், மின் இணைப்பையும் துண்டித்தனர். இதுகுறித்து கடந்த மே 5ஆம் தேதி அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதியவில்லை. இதையடுத்தே, ஆக்ரா போலீஸ் கமிஷனர் டாக்டர் பிரிதிந்தர் சிங்கைத் தொடர்புகொண்டு தகவல் சொன்னோம். அவரது உத்தரவுப்படி மே 8ஆம் தேதி, அப்பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனது மகள் அஞ்சனாவின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” எனக் குமுறியுள்ளார்.
வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ள காவல் துறை, யோகேஷ் தாக்கூர், ராகுல் குமார், சோனு தாக்கூர், குணால் மற்றும் சிஷுபால் உள்ளிட்ட 20 நபர்களை வழக்கில் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.