ஃபானி புயல் பாதிப்பிற்கு ரூ.1,600 கோடி நிவாரண தொகையாக வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
கடந்த மே 3ஆம் தேதி ஃபானி புயலால் ஒடிசா மாநிலம் கடும் பாதிப்படைந்தது. இதில் 43 பேர் உயிரிழந்தனர். அத்துடன் பயிர்கள், வாழை மரங்கள், காய்கறி விவசாய நிலங்கள், தோட்டப் பயிர்கள் உள்ளிட்ட ஏராளமானவை சேதமடைந்தன. இதனால் ஒடிசா மக்கள் வாழ்வாதரத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஃபானி புயல் பாதிப்புகளுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நிவாணத்தொகையாக ரூ.1,600 அறிவித்துள்ளார்.
பயிற் செய்துள்ள நிலத்தில் ஒரு ஹேக்டருக்கு ரூ.13,500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து வித வற்றாத பயிர்களுக்கும் ரூ.18,000 ஒரு ஹேக்டருக்கு அளிக்கப்படும் என்றும், இதில் விவசாயப் பயிர்களை முற்றிலும் இழந்தோருக்கு கூடுதலாக 22 சதவிகிதம் நிதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலைக்கு ரூ.15 ஆயிரமும், கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்கு தலா ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பசு மற்றும் எருமைகள் வைத்திருந்தவர்களுக்கு ரூ.30 ஆயிரமும், கால்நடை வளர்ப்புகளுக்கு ரூ.25,000 ஆயிரமும், ஒரு ஆடுக்கு ரூ.3,000 நிவாரணம் வழங்கப்படும் என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். அத்துடன் மீன்பிடி தொழிலாளர்களுக்கு தலா ரூ.12 ஆயிரமும், புயல் பாதித்த பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.