தமிழகம், கேரளாவை புரட்டி எடுத்த ஒகி புயலானது குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை நெருங்கிக் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு குஜராத் மற்றும் வடக்கு மகாராஷ்டிராவில் இன்று இரவு தொடங்கி இரண்டு நாட்களுக்கு புயலின் தாக்கம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் போது பலத்த வேகத்தில் காற்று வீசும்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒகி புயல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “ஒகி புயலானது அமினி திவியில் இருந்து 390 கி.மீ, மும்பையில் இருந்து 910 கி.மீ, சூரத் நகரில் இருந்து 1120 கி.மீ. தொலை உள்ளது. அடுத்து 48 மணி நேரத்தில் அந்த புயல் வடகிழக்கு திசை நோக்கி பயணிக்கும். வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு அருகில் உருவாகிய ஒகி புயலானது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடியது. வீசிய புயல் காற்றில் வாழை மரங்கள் முற்றிலும் சேதமைடைந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது. அதேபோல் கேரளா மற்றும் லட்சத்தீவுகளிலும் ஒகி புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. ஒகி புயலுக்கு 19 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100 பேர் காணவில்லை. ஒகி புயலின் சீற்றத்தால் கடலுக்குள் மீன்பிடிப்புக்காக சென்ற ஏராளமான மீனவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். மீனவர்களை மீட்கும் பணிகளில் இந்திய கடலோர காவல் படை, விமானப்படை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.