வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புல் புல் புயல் கரையை கடந்தபோது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள புல் புல் புயலில் இருவர் உயிரிழந்தனர்.
ஒடிசாவில் புயல் காற்றால் தனித் தீவில் சிக்கிக் கொண்ட எட்டு மீனவர்களை பேரிடர் அதிவிரைவுப் படையினர் மீட்டனர். புயல் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கேந்திரபரா மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதில் பல இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழைக்கு ஒருவர் உயிரிழந்தார். மேற்குவங்கம் மற்றும் வங்கதேசம் இடையே 24 பர்கானா மாவட்டம் அருகே புயல் கரையைக் கடந்த நிலையில் அங்கும் அண்டை மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. புல்புல் புயலால் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை மதிப்பிட மத்திய குழுவினரை அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.