சிறுநீரகத்தை ரூ.2 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக கூறி தம்பதியினரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த நபரை ஆந்திர போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திராவின் யனமலகுதுரு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சத்யன்ரையனா மற்றும் பார்கவி. இவர்கள் சிலருடன் சேர்ந்து மெடிக்கல் கடை ஒன்றை நடத்தி வந்தனர். தொழில் பங்காளிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இவர்கள் மெடிக்கல் கடையை மூடும் நிலைக்கு வந்தனர். இதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, அந்த தம்பதியினர் நிதிச் சிக்கலில் சிக்கினர். இதனால் பணத்தேவைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிய அந்த தம்பதியினர், தங்களில் ஒருவரின் கிட்னியை விற்கும் தவறான முடிவுக்கு வந்தனர். அதன்படி பார்கவின் கிட்னியை விற்க முடிவு செய்தனர். அதற்காக ஆன்லைனில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது டெல்லியின் சக்ரா உலக மருத்துவமனையில் இருந்து பேசுவதாக சோப்ரா சிங் என்ற பெயரில் ஒருவர் அந்த தம்பதியினரை தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு கிட்னிக்கு ரூ.2 கோடி தருவதாக அந்த நபர் தெரிவித்திருக்கிறார். உடனே சரியென்று சொன்ன தம்பதி, அவரிடம் தொடர்ந்து பேசியுள்ளனர். இதையடுத்து ரூ.17 லட்சம் சர்வீஸ் தொகையாக கட்ட வேண்டும் என அந்த நபர் கூறியிருக்கிறார். அதற்காக வங்கியில் கடன் வாங்கிய அந்த தம்பதியினர், 24 பரிமாற்றங்களில் ரூ.17 லட்சத்தை ஆன்லைன் பரிவர்த்தனை செய்துள்ளனர். அந்த நபர் கண்டிப்பாக ரூ.2 கோடி கிடைக்கும் என்றும், அதன்பின்னர் உங்களின் ரூ.17 லட்சமும் கொடுக்கப்படும் என்று கூறியதை நம்பி அந்த தம்பதியினர் பணத்தை அனுப்பியிருந்தனர்.
அதன்பின்னர் மீண்டும் அந்த நபரை தொடர்புகொண்டு கிட்னி விற்பனை குறித்து கேட்டபோது, இன்னும் ரூ.5 லட்சம் மட்டும் தேவை அதையும் அனுப்பிவிட்டால் உடனே கிட்னியை பெற்றுக்கொண்டு ரூ.2 கோடியை தருவதாக தெரிவித்திருக்கிறார். அப்போது தான் அந்த தம்பதியினருக்கு தாங்கள் ஏமாற்றப்படுவது புரிந்திருக்கிறது. உடனே காவல்துறையினரை அணுகிய அந்த தம்பியினர் தாங்கள் ஏமாற்றப்பட்டது தொடர்பாக புகாரளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.