போலியான முறையில் பி.எம். கேர்ஸ் என்ற இணையதள இணைப்புகளைப் பயன்படுத்தி சைபர் மோசடிகள் மக்களை ஏமாற்றுவதாக மகாராஷ்டிரா சைபர் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாட்டு மக்கள் நிதி தந்து உதவலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். கொரோனா நிவாரண நிதிக்காகப் பிரதம மந்திரி பெயரில் PM CA-R-ES FU-ND என்ற யுபிஐ கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பிரதமரின் நிவாரண நிதிக்கு முக்கிய பிரமுகர்கள், பெரிய கம்பெனிகள் நிதியுதவி அளித்து வருகின்றன. இருப்பினும், இதுதொடர்பாக பல புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், போலியான முறையில் பி.எம். கேர்ஸ் என்ற இணையதள இணைப்புகளைப் பயன்படுத்தி சைபர் மோசடிகள் மக்களை ஏமாற்றுவதாக மகாராஷ்டிரா சைபர் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பல இணைப்புகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வழங்கும் நன்கொடைகளை pmcares@sbi என்ற உண்மையான லிங்கை பயன்படுத்துமாறு அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த சைபர் மோசடிகள் தொடர்பாக இதுவரை 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் மும்பையில் எட்டு, புனே கிராம மற்றும் சதாரா மாவட்டத்தில் தலா ஆறு, பீட் மற்றும் நாசிக் கிராமத்தில் தலா ஐந்து, நாக்பூரில் தலா நான்கு, நாசிக் நகரம், தானே மற்றும் கோலாப்பூரிலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசிக் நகரில் உள்ள மாலேகானில் கொரோனா குறித்து வகுப்புவாத கோணத்துடன் டிக்டாக் வீடியோ தயாரித்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் யார் வேண்டுமானாலும் மத்திய அரசுக்கு நிதியுதவி அளிக்கலாம் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தங்களால் முடிந்த நிதியுதவிகளைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் ஆன்லைன் மூலம் வழங்கி வருகின்றனர்.