ஒரு பொருளை அதன் அம்சத்தில் இருந்து வேறு விஷயத்திற்கெல்லாம் பயன்படுத்துவதில் இந்தியர்களே பெரும்பாலும் கில்லியாக இருப்பார்கள். குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்களையே வெவ்வேறு விதங்களில் பயன்படுத்துவர்கள். அது பற்றிய பல வீடியோக்களும் சமூக வலைதளங்களில் நித்தமும் காணக் கிடக்கின்றன.
இப்படி இருக்கையில், எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கும் நிலையில், இந்தியாவின் பிரபல இ-பைக்கான ஓலாவின் மின் வாகனத்தின் முக்கிய அம்சத்தை ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிரிக்கெட் கமென்ட்ரிக்கு பயன்படுத்திய வீடியோதான் தற்போது ட்விட்டர் தளத்தில் பரவி வருகிறது.
அதன்படி, ஒடிசாவின் கட்டக் பகுதியில் இளைஞர்கள் குழு ஒன்று சேர்ந்து மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்க, மற்றொரு வாலிபர் ஒருவர் ஓலா எலக்ட்ரிக் வாகனத்தில் உள்ள ஸ்பீக்கர் வசதியை வைத்து, மொபைல் ஃபோனை ப்ளூடூத்தில் இணைத்து கமென்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
வெறும் 28 நொடிகளே கொண்ட அந்த வீடியோ கிட்டத்தட்ட லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஓலா நிறுவனத்தின் நிறுவனரும், செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வாலே அந்த வீடியோவை ரீட்வீட் செய்து பாராட்டவும் செய்திருக்கிறார்.
அந்த ட்வீட்டில், “எங்கள் தயாரிப்பை இதுவரை இந்த முறையில் பயன்படுத்தியதை நான் கண்டதே இல்லை” எனக் குறிப்பிட்டு சூப்பர் என்றும் ஸ்மைலியை பதிவிட்டிருக்கிறார் பாவிஷ். இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், “வாடிக்கையாளர்கள்தான் ஒரு தயாரிப்பின் உண்மையான விளம்பரதாரர்கள்” என்றும், “வித்தியாசமான அணுகுமுறை” , “இந்த மாதிரி ஓலா பைக்கை பயன்படுத்த அதன் நிறுவனரே யோசித்திருக்க மாட்டார்” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.