மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளை தொடர்ந்து பெட்ரோல், டீசல், தங்கம் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்டு வரும் சிறப்பு கூடுதல் கலால் வரி தலா ஒரு ரூபாய் உயர்த்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் திரட்டப்படும் நிதி சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கூடுதல் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதவிகிதத்தில் இருந்து 12.5% ஆக உயர்த்தப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார். தங்கத்தை இறக்குமதி செய்ய கூடுதல் செலவு ஆகும் என்பதால் தங்க நகைககளின் விலையும் உயர உள்ளது. இறக்குமதி செய்யப்படும் சிசிடிவி கேமரா, வாகன உதிரிபாகங்கள், டைல்ஸ், மார்பிள், பிவிசி, கண்ணாடி ஒளி இழை குழாய் ஆகியவற்றுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இவ்வகை பொருட்களின் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.