”நாடாளுமன்றத்தை நாடாதது ஏன்?”-பண மதிப்பிழப்புக்கு எதிராக 5-ல் ஒரு நீதிபதி மட்டும் தீர்ப்பு

”நாடாளுமன்றத்தை நாடாதது ஏன்?”-பண மதிப்பிழப்புக்கு எதிராக 5-ல் ஒரு நீதிபதி மட்டும் தீர்ப்பு
”நாடாளுமன்றத்தை நாடாதது ஏன்?”-பண மதிப்பிழப்புக்கு எதிராக 5-ல் ஒரு நீதிபதி மட்டும் தீர்ப்பு
Published on

’பண மதிப்பிழப்பு வழக்கில் மத்திய அரசின் நடவடிக்கை செல்லும்’ என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து இருப்பதுடன், அதற்கு எதிரான மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளவும் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பண மதிப்பிழப்பை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதையடுத்து அன்று முதல் ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. எனினும், இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில், போதுமான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாத காரணத்தால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து பலர் உயிரிழந்தனர். பலருடைய திருமணங்கள் நின்று போயின. எனினும் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. கிட்டத்தட்ட பண மதிப்பிழப்பின் தாக்கம் இந்தியாவில் ஓர் ஆண்டுவரை நீடித்தது.

மத்திய அரசின் இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், பி.ஆர்.காவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, ரிசர்வ் வங்கி தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியும் மனுதாரர்கள் சார்பில் ப.சிதம்பரம், ஷ்யாம் தவன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதாடினர்.

ரிசர்வ் வங்கி சார்பில், “இதில் தாற்காலிக கஷ்டங்கள் இருக்கலாம்; அவைகூட தேசத்தை கட்டி எழுப்புவதற்கான செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். பிரச்னைகள் எழும்போது அதற்கு தீர்வுகாண வழிமுறை தேவை” என்று எடுத்துரைத்து.

மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரம், ”ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் எந்த குறிப்பிட்ட பலனும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக தன்னிச்சையாக அரசு நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. ரிசர்வ் வங்கியின் மத்திய குழு பரிந்துரையின் பேரிலேயே நடவடிக்கை எடுக்க முடியும்” என்று சுட்டிக்காட்டினார். அதேநேரத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கும் வழக்கு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, ”உறுதியான நிவாரணம் வழங்கமுடியாத இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

அப்போது அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் விசாரணை முடிந்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும்(ஆர்பிஐ) தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்தனர்.

அதன்படி மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீதிமன்ற வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் ஜனவரி 2ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன்படி, பண மதிப்பிழப்பு வழக்கில் இன்று (ஜனவரி 2) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என அமர்வின் நான்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அவர்கள் தங்கள் தீரப்பில், "சரியாக ஆலோசித்துதான் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. அதேபோல எல்லா பணத்தையும் மதிப்பிழப்பு செய்யாமல் குறிப்பிட்ட தொகையை மட்டும்தான் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.

நோட்டுகளை மாற்ற 52 நாட்கள் அவகாசம் அளித்தது நியாயமானதுதான். பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடமும் மத்திய அரசு ஆலோசித்திருப்பதை கவனிக்க முடிகிறது. எனவே, பணமதிப்பிழப்பு முடிவை இனி திரும்பப் பெற முடியாது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்" எனத் தீர்ப்பளித்துள்ளனர்.

இதில் நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தார். "ஒரே அரசாணை மூலம் 1000, 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தது தவறு. பணமதிப்பிழப்பு நடவடிக்கை ரகசியமாக செய்ய வேண்டுமென மத்திய அரசு கருதியிருந்தால், அதை அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்றி இருக்கலாமே? இத்தகைய தீவிர நடவடிக்கையில் நாடாளுமன்றத்தை நாடாமல், இதுகுறித்து முடிவு எடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாது" எனத் தீர்ப்பளித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு தீர்ப்பைப் போன்று 10 சதவிகித இட ஒதுக்கீட்டு வழக்கிலும் 3 நீதிபதிகள் செல்லும் என்றும், 2 நீதிபதிகள் செல்லாது எனவும் மாறுபட்ட தீர்ப்பை அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com