அரியவகை ஆமை முட்டைகளை அக்கறையோடு பாதுகாத்து குஞ்சு பொறித்த பின் அவற்றை கடலில் விட்ட திருவாங்கூர் நேச்சர் ஹிஸ்டரி அமைப்பின் செயல் இயற்கை ஆர்வலர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது.
அரிய வகை விலங்கினங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆமையினங்களை காப்பாற்ற பல்வேறு தன்னார்வ அமைப்பினர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் கேரளாவில் ஆமை முட்டைகளை பாதுகாத்து அவற்றை ஆமை குஞ்சுகளாக்கி கடலில் விட்ட நிகழ்வு நெகிழ்ச்சிக்குரியது தான்.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள பரவூர் கடற்பகுதியில் கடந்த 52 தினங்களுக்கு முன்பு கோழிக்கரையை சேர்ந்த மீனவர் முகம்மது லாசிஸ் கடற்கரைப் பகுதியில் அரியவகை லீ - பிராட்லி இனத்தை சேர்ந்த கடல் ஆமை மூட்டைகளை பார்த்துள்ளார். அது பற்றி உடனடியாக திருவனந்தபுரத்தில் செயல்படும் திருவாங்கூர் நேச்சர் ஹிஸ்டரி சொசைட்டி அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து திருவாங்கூர் நேச்சர் ஹிஸ்டரி சொசைட்டி அமைப்பின் டாக்டர். ஹிரிஷ் சதாசிவம், அன்சின் ஷெரிப், ஜெயக்குமார், சாஜி உட்பட 15 பேர் அடங்கிய குழுவினர் இந்த லீ - பிராட்லி இனத்தை சேர்ந்த கடல் ஆமை மூட்டைகளை சேகரித்து 60 மூட்டைகள் வீதம் 5 பெட்டிகளில் பாதுகாத்து வந்துள்ளனர்.
இந்த வகை ஆமைகள் மூட்டையிலிருந்து வெளிவர 45 முதல் 60 நாட்களாகும். இந்நிலையில் ஒரு பெட்டியில் உள்ள மூட்டைகளிலிருந்து ஆமை குஞ்சுகள் வெளிவரத் தொடங்கியது. முட்டையிலிருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகளை இந்த அமைப்பினர் கடலில் விட்டனர்.
இந்த ஆமை குஞ்சுகள் 55 முதல் 60 கிலோ எடை வரை வளரக்கூடியது. மேலும் பரவூர் கடற்பகுதியில் இருந்து பாம்புகள் மற்றும் பருந்து பறவைகளிடம் இருந்து முட்டைகளை காப்பாற்றி ஆமை குஞ்சுகளை கடலில் விட்ட இந்த நிகழ்வு இயற்கை ஆர்வலர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது.
உயிர் கிடைத்த சந்தோஷத்தில் ஆமை குஞ்சுகள் பிஞ்சு குழந்தைகள் போல் கடற்கரை மணலில் பாதம் பதித்து ஊர்ந்து சென்று ஆர்ப்பரிக்கும் அலைகளோடு கலந்து சென்றது காண்போரை நெகிழச் செய்வதாய் அமைந்துள்ளது.