பிறந்தநாள் என்றாலே சிறப்புதான். அதிலும் மிகவும் நெருக்கமானவர்களிடமிருந்து வரும் வாழ்த்துகள் வாழ்நாள் முழுவதும் அழகிய நினைவாக நிலைத்திருக்கும். தற்போது வித்தியாசமான முறைகளில் பிறந்தநாளை கொண்டாடி வாழ்த்துத் தெரிவித்து ஆச்சர்யப்படுத்துவது வழக்கமாகி வருகிறது. ஆனால் ஒரு மகளுக்கு தந்தையின் சாதாரண வாழ்த்துக்கூட விலைமதிப்பற்றதாகத்தான் இருக்கும்.
அந்தவகையில், தனது 21வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரூபாஸ்ரீ என்ற பெண் தன் தந்தை அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்தின் ஸ்க்ரீன்ஷாட்டை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ஹேப்பி பர்த்டே மனு பேட்டா. இன்று காலையில் நீ அழுததைப் பார்த்தேன். தகுதியில்லாதவருக்காக நீ அழக்கூடாது என்பதை நான் உன்னிடம் சொல்லவிரும்புகிறேன். இப்போது உனக்கு 21 வயது ஆகிவிட்டது. உன்னுடைய மதிப்பு என்ன என்பதை நீ தெரிந்திருக்க வேண்டும். உன்னுடைய மதிப்பைத் தெரிந்து உன்னை கவனித்துக்கொள்.
மக்களுக்காக அழுவதைவிட பிரியாணிக்காக அழுவது சிறந்தது. ஆனால் உன்னுடைய உணவுப்பழக்கத்தை நீ மாற்றிக்கொள்ளவேண்டும். மன அமைதிக்கு அனுமான் புத்தகத்தைப் படிக்கச் சொல்லியிருந்தேன். உன்னை துன்புறுத்த நினைப்பவர்களின் எலும்பை நீ உடைக்கவேண்டும்’’ என்று அனுப்பியிருந்தார்.
இதைவிட அழகான பிறந்தநாள் வாழ்த்து ஒரு அப்பாவிடம் இருந்து வந்துவிட முடியாது என பலரும் அந்த ட்வீட்டுக்கு பதில் ட்வீட் செய்துவருகின்றனர். 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பிறந்தநாள் வாழ்த்துக்களையும், தந்தை-மகள் பாசத்தைப் பற்றியும் ட்வீட் செய்துவருகின்றனர்.