பாதுகாப்பு படை வீரர்களை வேறு இடத்துக்கு அழைத்துச் செல்ல விமானங்களை பயன்படுத்தும் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் 78 வாகனங்களில் 2500க்கும் மேற்பட்ட வீரர்களை ஒரே நேரத்தில் அழைத்துச்செல்லப்பட்டது தவறு என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்களை சாலை மார்க்கமாக அழைத்துச் செல்வதில் உள்ள பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தச்சூழலில், விமானம் மூலம் வீரர்களை இடமாற்றம் செய்யும் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன்படி ஸ்ரீநகர் - ஜம்மு இடையே வீரர்களின் பயணத்துக்காக வாரத்துக்கு 4 நாட்களுக்கு தனி விமானம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் அதே போல் டெல்லி - ஸ்ரீநகர் இடையே வீரர்களை அழைத்துச்செல்வதற்காக தினமும் தனி விமானம் தயார் நிலையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயண முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சிஆர்பிஎஃபின் பொது இயக்குநர் பட்நாகர், ''வீரர்களை வேறு இடத்துக்கு அழைத்துச்செல்லும் முறையில் சில மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அவர்களின் பயண நேரம், வானிலை விவரங்கள், அவர்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.