ஓடும் ரயிலில் குடிபோதையில் பயணிகளுக்கு தொல்லை - பயணியின் புகாரில் சிஆர்பிஎப் வீரர் கைது

ஓடும் ரயிலில் குடிபோதையில் பயணிகளுக்கு தொல்லை - பயணியின் புகாரில் சிஆர்பிஎப் வீரர் கைது
ஓடும் ரயிலில் குடிபோதையில் பயணிகளுக்கு தொல்லை - பயணியின் புகாரில் சிஆர்பிஎப் வீரர் கைது
Published on

ஓடும் ரயிலில் குடிபோதையில் பயணிகளை ஆபாசமாக திட்டி தொல்லை கொடுத்த சிஆர்பிஎப் வீரரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் இருந்து குருவாயூர் விரைவு ரயிலில் நேற்று பயணம் செய்தவர் விபின் (33). இவர் சிஆர்பிஎப் துணை ராணுவப் படையில் பணியாற்றி வருகிறார். தனது விடுமுறையை முடித்துவிட்டு, அலுவல் பணிக்கு திரும்பி செல்வதற்காக குருவாயூர் ரயிலில் எஸ் -10 பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது விபின் குடிபோதையில் சக பயணிகளை ஆபாசமாக திட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

இதனைக் கண்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு குருவாயூர் ரயில் வந்ததும் ரயில்வே காவல்துறையினர் விபினை கைது செய்தனர்.

இந்த தகவலை ரயில்வே காவல்துறை டிஐஜி அபிஷேக் தீக்சித், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ரயில்வே தொடர்பான புகார்களுக்கு எந்த நேரத்திலும் ரயில்வே காவல்துறையினரை 99625 00500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com