சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டதில் இருந்து நாள்தோறும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், அங்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் வரும் பக்தர்கள், எரிமேலி, கன்னமாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தரிசன நேரத்தை ஒருமணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டும், அதற்காக காத்திருப்போரின் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் வருகிறது. காவலர்கள் பற்றாக்குறையால் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில், பக்தர்களின் வருகையை 75 ஆயிரமாக குறைக்க வேண்டும் என தேவசம்போர்டுக்கு காவல்துறையினர் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அதுகுறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
இதனிடையே கூட்ட நெரிசல் காரணமாக 18ஆம் படியேறி ஐயப்பனை தரிசிக்க நீண்ட நேரம் ஆவதால், பக்தர்கள் சிலர் சன்னிதானத்திற்கு செல்லாமலேயே மற்ற இடங்களில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.