1980 வாக்கிலேயே தான் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தியதாவும், இமெயில் அனுப்பியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தது, சமூக வலைத்தள மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலகோட் பயங்கரவாதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், “ தாக்குதலுக்கு திட்டமிட்ட நாளில், வானிலை மோசமாக இருந்ததால், வேறு ஒரு நாளில் தாக்குதல் நடத்தலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால், மேகங்களால், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிவிடும் என்பதால் தாக்குதல் நடத்த அனுமதி நான் அனுமதி அளித்தேன்” என தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அது எப்படி..? மேகங்களுக்கு ரேடார் கண்காணிப்பை மறைக்கும் சக்தி இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இந்த பேட்டியில் மோடியின் மற்றொரு பேச்சும் பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. அதாவது 1987-88-ஆம் ஆண்டிலேயே டிஜிட்டல் கேமராவை தான் பயன்படுத்தியதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 1987-ல் அகமதாபாத் அருகே பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியை, தான் டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படம் எடுத்ததாகவும் அதனை மெயில் வழியாக டெல்லிக்கு அனுப்பி வைத்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அந்த நேரத்தில் மிகக் குறைந்த நபர்களே இமெயிலை பயன்படுத்தியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அடுத்த நாள் தான் அனுப்பிய கலர் போட்டோவை பிரிண்ட் போட்டு பார்த்த அத்வானி ஆச்சரியமடைந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு தான் மீண்டும் சர்ச்சை பொருளாக மாறியிருக்கிறது.
நிக்கான் தனது முதல் டிஜிட்டல் கேமராவையே 1987-ஆம் ஆண்டுதான் விற்பனை செய்ததாக பலரும் தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் அப்போதே பிரதமர் மோடி டிஜிட்டல் கேமராவை வைத்திருந்தாரா என்றும் கேள்வி எழுப்புகின்றனர். எந்தவொரு பெரிய பின்புலம் இல்லாமல் மிகச் சாதாரண ஏழை மகனான வளர்ந்த பிரதமர் மோடி, டிஜிட்டல் கேமரா வெளியான சில நாட்களிலேயே அவ்வளவு தொகை கொடுத்து வாங்கினாரா என கேள்வி எழுப்புகின்றனர்.
இமெயில் சர்வீஸை எடுத்துக்கொண்டால் விஎஸ்என்எல், கடந்த 1995-ஆம் ஆண்டில்தான் முதல்முறையாக இணையதள வசதியை அறிமுகம் செய்தது. அப்படியிருக்க அதற்கு முன்னதாக பிரதமர் மோடி யாருக்கு இமெயில் அனுப்பினார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிரதமர் மோடியின் இந்த பேச்சே தற்போது சமூக வலைத்தளங்களில் அனல்பறக்கும் விவாதமாகவே மாறிவருகிறது.