நிதிஷ் ராணாவின் மனைவியை பின்தொடர்ந்து தொல்லை - இருவர் கைது
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் நிதிஷ் ராணா. இவரது மனைவி சாச்சி மர்வா கட்டிட வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லியின் கிர்த்தி நகரில் தனது பணியை முடித்து விட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இரண்டு இளைஞர்கள் அவரை காரில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அதோடு, காரில் மோதுவது போல பைக் ஓட்டி வந்துள்ளனர்.
அந்த இரண்டு பேரும் தங்கள் பைக்கில் தொடர்ந்து காரை துரத்தியபடி வந்ததால், அவர்களை மர்வா தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் தனக்கு இரவு நேரத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசாரும் இதை கண்டுகொள்ளவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாச்சி மர்வா, ''டெல்லியில் வழக்கம் போல் எனது பணிகளை முடித்துக் கொண்டு நான் வீடு திரும்பி கொண்டு இருந்தேன். அப்போது எனது காரை பின் தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் எனது காரை தாக்க தொடங்கினர். எந்த ஒரு காரணமும் இன்றி இப்படி அந்த இரு இளைஞர்களும் என்னை துரத்தினர். இது குறித்து நான் போலீசாரைத் தொடர்பு கொண்டு புகார் கூறினேன். ஆனால், போலீசாரோ, நீங்கள் தற்போது பாதுகாப்பாக வீட்டிற்கு போய் விட்டீர்கள். எனவே அதை விட்டு விடுங்கள். அடுத்த முறை வாகன எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை நான் அவர்களின் தொலைபேசி எண்ணையும் எடுத்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.
இதையடுத்து சாச்சி மர்வாவை பின் தொடர்ந்து துன்புறுத்தியது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் போது, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சைட்னயா சிவம் மற்றும் விவேக் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் அடையாளம் கண்டு அவர்களது வீட்டில் இருந்து கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.