செய்தியாளர் நிரஞ்சன் குமார்
உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், இது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஒன்று என்றும் உச்சநீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அருந்ததியினர் உள்ளிட்ட சமூகத்தினருக்கான உள் இட ஒதுக்கீடு என்பது சட்டப் பாதுகாப்பை பெற்றுள்ளது.
பஞ்சாபில் அரசு வேலைவாய்ப்புகளில் எஸ். சி.. எஸ். டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில், அம்மாநில அரசு 2006 ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், பஞ்சாப் அரசின் சட்டத்தை ரத்து செய்தது.
இதற்கு எதிராக பஞ்சாப் அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இதில் 6 நீதிபதிகள் ஒரே மாதிரி தீர்ப்பையும், நீதிபதி பி.எம்.திரிவேதி மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கியுள்ளனர்.
பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் படி, உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக மாநில அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று 6 நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்பதாகவும், ஈ.வி. சின்னையா வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு வழங்கிய முந்தைய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வகுப்பினர் போதிய பிரதிநிதித்துவத்தை பெற மாநில அரசு வகைப்படுத்தலாம். அரசியலமைப்புச் சட்டமே எஸ்சி எஸ்டியை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அங்கீகரிக்கும் போது, இந்த வகுப்பினருக்கான உறுதியான நடவடிக்கைக்கான அளவுகோல்கள், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாகதான் இருக்கும். மேலும் எஸ்.சி, எஸ்டி பிரிவினரிடையே கிரீமிலேயரை அடையாளம் காணவும் இட ஒதுக்கீடு என்பதிலிருந்து அவர்களை வெளியேற்றவும் ஒரு கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். உண்மையான சமத்துவத்தைப் பெறுவதற்கான ஒரே வழி அது மட்டுமே ஆகும் என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்
அதே நேரத்தில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி பி.எம்.திரிவேதி “இதுபோன்ற உள் ஒதுக்கீடு சட்டங்களை கொண்டு வருவதற்கு மாநிலங்களுக்கு எந்தவித அதிகாரமோ அல்லது தகுதியோ கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் ஈ.வி.சின்னையா முடிவு சரியானதாகும்” என அறிவித்தார் . இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநிலங்கள் குடியரசுத் தலைவரின் பட்டியலை குழப்ப முடியாது என்று மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தார்.
இருப்பினும் பெருமான்மையான நீதிபதிகள் ஒருமித்த உத்தரவை பிறப்பித்துள்ளதால் பஞ்சாப் அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்பது உறுதியானது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் காரணமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அருந்ததியினர் உள்ளிட்ட சமூகத்தினருக்கான உள் இட ஒதுக்கீடு சட்டப் பாதுகாப்பை பெற்றுள்ளது.