“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி

“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி
“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி
Published on

சபரிமலை விவகாரத்தில் பழைய நிலை தொடரும்படி மத்திய அரசு ஒரு புதிய சட்டம் இயற்றவேண்டும் என்று கேரளா தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். 

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்தத் தீர்ப்பை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு அமல்படுத்திவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டங்களுக்கு எதிராக ஆளும் சிபிஎம் அரசு பாலின சமத்துவம் குறித்த மனிதச் சங்கிலி போராட்டத்தை கையில் எடுத்தது. 

இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்றவேண்டும் என்று கேரளா தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “பழங்கால நடைமுறைகள் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை சட்டத்தின் மூலம் காத்தால் அது நல்லதுதான். இவற்றை பாதுகாக்க பக்தர்கள் வீதியில் வந்து போராடத் தேவையில்லை. எனவே சபரிமலை விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடர்வது போல மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும். அதற்கு கால தாமதம் ஆகும் பட்சத்தில் மத்திய அரசு அவசர சட்டம் போடவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கேரள எம்பி என்.கே.பிரமசந்திரன் மக்களவையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக தனிநபர் சட்ட மசோதா தாக்கல் செய்யவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் கேரளா அமைச்சரின் கருத்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com