ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து பதிண்டாவுக்கு எலுமிச்சைப் பழங்களை ஏற்றியபடி டிரக் ஒன்று, கடந்த ஜூன் 30ஆம் தேதி சென்றது. அன்று இரவு, ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாசெடி சுங்கச்சாவடி அருகே ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பசு காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், அந்த டிரக்கை வழிமறித்து அதில் இருந்த இரண்டு பேரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மாடுகளை கடத்திச் சென்றதாகக் கூறி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவமறிந்த போலீசார் பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் பலத்த காயமடைந்தவர்கள் சோனு பிஷ்னோய் (29) மற்றும் சுந்தர் பிஷ்னோய் (35) என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர்கள் இருவரும் தரையில் படுத்திருக்கும் நிலையில், தடிகளை ஏந்திய ஒரு கும்பல் மீண்டும் மீண்டும் தாக்குவதை காட்சிகள் காட்டுகின்றன. அண்டஹ்க் கும்பல் அவர்களின் முகத்தில் செருப்பால் அடித்ததுடன், தலையில் எட்டி உதைப்பதும் தெரிகிறது.
இந்த வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாட்டில் ஒட்டுமொத்தமாக பசு காவலர்களால் நடத்தப்படும் கொலைவெறி வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து இந்தக் கொடூரச் செயல்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.
இதற்குமுன் கடந்த ஜூன் 16ஆம் தேதி ஹரியானாவில் இறைச்சிக் கடை ஒன்றில் பசு காவலர்கள் நடத்திய சோதனையில் கோழிக்கறி வாங்க வந்த முஸ்லிம் கடை உரிமையாளரும், இரண்டு இந்து ஆண்களும் காயமடைந்தனர். அடுத்து, ஜூன் 15 அன்று, ஹரியானாவின் மேவாட் கிராமத்தில் கால்நடைகளை படுகொலை செய்ததாகக் கூறி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இரண்டு முஸ்லிம் ஆண்களைத் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.