கொரோனா விரைவுச் செய்திகள் மே 21: கொரோனா அதிகரிப்பு | ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு

கொரோனா விரைவுச் செய்திகள் மே 21: கொரோனா அதிகரிப்பு | ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் மே 21: கொரோனா அதிகரிப்பு | ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு
Published on
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் வரும் 29 முதல் 31ஆம் தேதிக்குள் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் என ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் வித்யாசாகர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • ஆந்திர மாநிலம் நெல்லூரில் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தருவதாக பரவிய தகவலால், ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மருத்துவமனைகளை விட்டு கொரோனா நோயாளிகள் வெளியேறினர். இந்த ஆயுர்வேத மருந்து குறித்து ஐசிஎம்ஆர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
  • சென்னையில் கொரோனா ஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 744 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 ஆயிரத்து 461 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறையினர் நேற்று நடத்திய சோதனையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 3 ஆயிரத்து 592 வழக்குகளும், தனிமனித இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 387 வழக்குகளும், அரசு அறிவித்த வழிகாட்டுதலை மீறி செயல்பட்ட 89 கடைகள் மூடப்பட்டு, 10 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பணமும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
  • புதுச்சேரியில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 20 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற வசதியாக இந்நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
  • நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய் பரவல் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த நோய் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய்க்கு அம்போடெரிசின் பி என்ற தடுப்பு மருந்தை வழங்கலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்தது. இந்நிலையில், மருந்திற்கு பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்கும் வகையில், மேலும் ஐந்து நிறுவனங்கள் அம்போடெரிசின் பி மருந்து தயாரிப்பில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • டெல்லியில் கொரோனா பரவல் குறைந்து வருவதாகவும், 36 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அரசு அறிவித்துள்ள புள்ளி விவரங்களின் படி, இன்று ஒரே நாளில் மூவாயிரத்து ஒன்பது பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏழாயிரத்து 288 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இன்று கொரோனா உயிரிழப்பு 252 ஆக உள்ளது. மேலும் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 683 பேர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
  • கொரோனா நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில், உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. 14443 என்ற ஹெல்ப்லைன் மூலம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பொது மக்களின் கேள்விகளுக்கு தீர்வு அளித்து வருகின்றனர். இந்த வல்லுநர்கள், நோயாளிகளுக்கு ஆலோசனைகளையும், தீர்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அருகிலுள்ள ஆயுஷ் வசதிகள் குறித்தும் அவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.
  • கேரளாவில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த மே மாதம் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் திருச்சூரில் அமல்படுத்தப்பட்ட ட்ரிபிள் முடக்கம் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். மூன்று மாவட்டத்திலும் நோய் தொற்று விகிதம் குறைந்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதே நேரம் மலப்புரம் மாவட்டத்தில் ட்ரிபிள் முடக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
  • கும்பகோணத்தில் ஒரே பகுதியைச் சேர்ந்த 33 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோயிலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சின்ன பிள்ளை என்பவர் நோய்த் தொற்றால் இறந்தார். அவரின் இறுதி சடங்கிற்கு அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் சென்று வந்தனர். இதில் பலருக்கு சளி இருமல் பாதிப்பு ஏற்பட்டதை, கொரோன பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 33 நபர்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் பயன்படுத்தப்படும் டாக்சி ஆம்புலன்ஸ் சேவைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விவாதித்த போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்களது பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வித்தியாசமான முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தனர். இதனை பட்டியலிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தமிழகத்தின் டாக்சி ஆம்புலன்ஸ் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
  • கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசியை வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா உட்பட உலகெங்கும் கொரோனா தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதே நேரம் தேவை இருக்கும் அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் இந்திய நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கோவாக்சின் தடுப்பூசிகளை ஐதராபாத் தவிர நாட்டின் மற்ற பகுதிகளிலும் உற்பத்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து வெளிநாடுகளிலும் கோவாக்சின் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து சர்வ தேச சுகாதார நிறுவனத்திடம் மத்திய அரசு பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஃபைசர், மோடர்னா ஆகிய தடுப்பூசிகளையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய அனுமதிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com