தினமும் 6 லட்சம் பாதிப்பு... மீண்டும் கொரோனாவின் பிடியில் உலக நாடுகள்!

தினமும் 6 லட்சம் பாதிப்பு... மீண்டும் கொரோனாவின் பிடியில் உலக நாடுகள்!
தினமும் 6 லட்சம் பாதிப்பு...  மீண்டும் கொரோனாவின் பிடியில் உலக நாடுகள்!
Published on

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.94 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் 2-வது, 3-வது அலைகளாக பரவும் கொரோனா வைரஸ், கடுமையான பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. ஓராண்டுக்கு பிறகு மீண்டும் அதே மார்ச் மாதத்தில் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.94 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசில் நாட்டில் 89,200 பேரும், இந்தியாவில் 72,182 பேரும், அமெரிக்காவில் 68,756 பேரும், பிரான்ஸ் நாட்டில் 41,907 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ரேட் 47 சதவீதம் என்ற அளவுக்கு மிக மிக அதிகமாக இருக்கிறது. கொரோனா முதல் அலை மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வீசிவந்த நிலையில், இரண்டாவது அலை தென் அமெரிக்கா, தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகளிலும் தீவிரம் எடுத்து வருகிறது

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் வரையிலான நிலவரப்படி கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாக பரவியதோ அதைவிட இப்போது மிக வேகமாக பரவுவதாக கூறுகிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் பாதிப்புகள் பதிவாகுவதற்கு 32 நாட்கள் அப்போது தேவைப்பட்டது. ஆனால் இப்போது இரண்டாவது அலை வீசக்கூடிய காலகட்டத்தில் இதே அளவை எட்டிப்பிடிக்க சுமார் 16 அல்லது 17 நாட்கள்தான் தேவைப்படுகிறது என்கிறது புள்ளிவிபரம். நாளொன்றுக்கு 6 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இது கடந்த ஆண்டின் பெரும்பகுதியை விட அதிகமாக உள்ளது.

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது. வரும் 19-ம் தேதிக்குள் அமெரிக்காவில் உள்ள வயது வந்தோரில் 90% பேருக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். எஞ்சிய 10% பேருக்கு மே 1-ம் தேதிக்கு முன்னதாக தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.‌ இந்தியாவில் இதுவரை 6.51 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதால், ஒட்டுமொத்த நாடும் ஆபத்தில் இருப்பதாக இந்தியா எச்சரித்துள்ளது.

கொரோனா முதல் அ்லை உருவானபோது நம்மிடம் எந்த ஒரு தடுப்பு மருந்தும் கிடையாது. இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவை அனைத்து மக்களிடம் சென்று சேரும் வரை மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Courtesy: The Print

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com