> தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 39 பேர் உட்பட 17, 858 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 554 சிறார்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி அன்று 128 சிறார்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தொடர்ந்து 7ஆவது நாளாக சிறார்களின் தினசரி பாதிப்பு 500ஐ கடந்து பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் இதுவரையிலான கொரோன பாதிப்பு 11 லட்சத்து 48 ஆயிரத்து 64ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15 ஆயிரத்து 542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 10 லட்சத்து 21 ஆயிரத்து 575 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 933ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 556 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 445 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 164 பேரும், கோவை மாவட்டத்தில் ஆயிரத்து எட்டு பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 792 பேரும், நெல்லை மாவட்டத்தில் 849 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 576 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 39 பேர் உட்பட 17 ஆயிரத்து 858 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 554 சிறார்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி அன்று 128 சிறார்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது தொடர்ந்து 7ஆவது நாளாக சிறார்களின் தினசரி பாதிப்பு 500ஐ கடந்து பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் இதுவரையிலான கொரோன பாதிப்பு 11 லட்சத்து 48 ஆயிரத்து 64ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15 ஆயிரத்து 542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 10 லட்சத்து 21 ஆயிரத்து 575 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 933ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 556 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 445 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 164 பேரும், கோவை மாவட்டத்தில் ஆயிரத்து எட்டு பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 792 பேரும், நெல்லை மாவட்டத்தில் 849 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 576 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
> கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக சென்னையில் 4-வது நாளாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசே நேரடியாக மருந்தை விற்பனை செய்து வருகிறது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், அதிகாலை 4 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கினர். சென்னை மட்டும் இல்லாமல் வேலூர், கடலூர், கோவை, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் வந்த மக்கள் சுமார் 8 மணி முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து மருந்தை வாங்கிச் சென்றனர். மருந்து வாங்க வருபவர்களிடம் ஆதார், மருத்துவர் பரிந்துரை கடிதம் ஆகியவற்றை சரிபார்ப்பதற்கு காலஅவகாசம் தேவைப்படுதால், தாமதமாகுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
> கொரோனா பரவத் தொடங்கியதிலிருந்து அமைதியாக இருந்துவிட்டு, தற்போது துரிதமாக செயல்படுவதாக கூறுவது ஏன் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ரெம்டெசிவிர், படுக்கைகள், வெண்டிலேட்டர், ஆக்சிஜன் ஆகியவற்றின் கையிருப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ரெம்டெசிவிர் விற்பனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும், மருந்து கள்ளச்சந்தையில் விற்பனையாகிறது என்று செய்தி வெளியாகி உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் மையங்கள் அமைப்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்றார். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், கொரோனா தடுப்பிற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இரண்டாவது அலை என்பது எதிர்பாராதது எனக் குறிப்பிட்டார். கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள நிலையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி செயல்படுவதாக சுட்டிக்காட்டினர்.
> மாநில அரசுகள் வசம் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசின் விளக்கம் வெளியாகியுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை நிலவரப்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாட்களில் மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
>கொரோனா வைரஸ் போல தலைக்கவசம் அணிந்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். பேரணியை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். மெரினா கடற்கரையில் காந்திசிலை சந்திப்பில் தொடங்கி, புனித ஜார்ஜ் பள்ளி வரை பல முக்கிய சாலைகள் வழியாக 84 இருசக்கர வாகனங்களில் போக்குவரத்துகாவலர்கள் பேரணியாகச் சென்றனர். எமதர்மன் போல வேடமணிந்த நபர் சிக்னல்களில் நின்று கொண்டும் பைக்கில் சென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதைப்போல கொரோனா வைரஸ் போல ஹெல்மெட் அணிந்து கொண்டு போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
> நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 15 கோடியை கடந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 20 ஆயிரத்து 648 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் 93 லட்சத்து 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட நிலையில், 61 லட்சத்து 48 ஆயிரம் பேர் 2 ஆம் டோஸ் எடுத்துக் கொண்டனர். அதேபோல, ஒரு கோடியே 23 லட்சத்து 19 ஆயிரத்து 903 முன்களப்பணியாளர்கள் முதல் டோஸ் எடுத்துக் கொண்ட நிலையில், அவர்களில் 66 லட்சத்து 12 ஆயிரத்து 789 பேர் 2 ஆம் டோஸ் போட்டுக்கொண்டுள்ளனர். சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களில் பலர், 2 ஆம் டோஸ் போடுவதில் சுணக்கம் காட்டுகிறார்கள். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
> ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் கொரோனா நோயாளிகள் திணறும் நிலையில், இந்தியாவுக்கு 40க்கும் அதிகமான நாடுகள் உதவ முன்வந்துள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் 550 ஆக்சிஜன் உற்பத்தி பிளாண்ட்டுகள் வர உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்த்தன் ஷிறிங்கலா தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 75 வென்ட்டிலேட்டர்கள், உள்ளிட்ட 22 மெட்ரிக் டன் பொருட்களுடன் 2 விமானங்கள் வந்துள்ளன. ஆக்சிஜன் உற்பத்தி கருவிகளுடன் அமெரிக்காவில் இருந்து 3 விமானங்கள் நாளை வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள், 15 மில்லியன் என் 95 முகக்கவசங்கள், 10 லட்சம் ரேபிட் பரிசோதனை கருவிகள் உட்பட 100 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
> ஆக்சிஜன் சிலிண்டர் எனக் கூறி தீயணைப்பானை விற்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். உத்தம் நக பகுதியை சேர்ந்த அசுதோஷ் சவுகான் என்ற 19 வயது இளைஞரும், ஆயுஷ் குமார் என்ற 22 வயது இளைஞரும் சேர்ந்து இந்த வேலையை செய்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரின் உறவினர் இவர்களிடம் ஏமாந்துள்ளார். தீயணைக்கும் கருவிகள் இரண்டை தலா பத்தாயிரம் ரூபாய்க்கு அவர்கள் விற்றுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
> கர்நாடகாவில் இருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போன நிலையில், அவர்கள் நீலகிரி மாவட்டத்துக்குள் வராமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 3 ஆயிரம் பேர் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்த நிலையில், பலர் வீடுகளை காலி செய்துவிட்டு சென்றுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர்கள் நீலகிரி மாவட்டத்துக்குள் வராமல் இருக்கும் வகையில் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகம் மற்றும் கேரளாவில் இருந்து வருபவர்கள் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால், இ பாஸ் இன்றி யாரும் நுழைய முடியாது என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
> கொரோனா பெருந்தொற்றை விட ஆபத்தானவையாக மாறியுள்ளன, கொரோனாவுக்கு இது தான் சிகிச்சை என கூறி சமூக ஊடகங்களில் வலம் வரும் பதிவுகள். அப்படி மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விட்டால், அது ஆக்சிஜன் அளவை அதிகரித்து கொரோனாவால் இருந்து காக்கும் என்ற வீடியோவை முன்னாள் எம்பி விஜய் சங்கேஸ்வர் வெளியிட்டிருக்கிறார். இதனை நம்பிய கர்நாடகா மாநிலம் சிந்தானூரை சேர்ந்த 45 வயது ஆசிரியர், பசவராஜ் மல்லிபட்டில், தனக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் மூக்கினுள் எலுமிச்சை சாற்றை விட்டிருக்கிறார். பின்னர் வாந்தி எடுத்த அவர் உயிரிழந்துவிட்டார். பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்பி உயிரை பறிக்கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
> கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு இறுதியில்தான் மீண்டும் தொடங்கின. இதன்பின் பல தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கொரோனா 2 அலை அதிகரித்து வருவதால் மீண்டும் திரைத்துறையினருக்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. குறிப்பாக திரையரங்குகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டது. ஆனால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை நடத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. படப்பிடிப்புகளில் பங்கேற்கும் தொழிலாளர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் உடல் வெப்ப நிலை சோதனை செய்து படப்பிடிப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால் இது சிறிய படங்களுக்கு மட்டுமே பொருத்தமாக உள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பல நெருக்கடிகள் உள்ளன என கூறப்படுகிறது.
குறிப்பாக ஒரு காட்சியை படமாக்க நூற்றுக்கும் அதிகமானவர்கள் தேவைப்படுகின்றனர். இதன்மூலம் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் பல படக்குழுவினர் தாமாகேவே முன்வந்து படப்பிடிப்பை ரத்து செய்துள்ளனர். இதன்படி சூர்யா-40, விக்ரம்-60, சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' உள்ளிட்ட பல படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பல திரைப்படங்களின் படப்பிடிப்பு இந்த வாரத்துடன் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கு அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்கள் பாதுகாப்பு முக்கியமானதாக உள்ளது. அதன் காரணமாகவே படப்பிடிப்பு நிறுத்தியுள்ளோம் என்று கூறுகின்றனர். அதேபோல் படப்பிடிப்பை நிறுத்தியிருப்பதால் நிச்சயம் பட்ஜெட் உயரும் அதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
> கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ராஜஸ்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணி 7.5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை மூலம் நிதி திரட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அணியின் வீரர்களும், உரிமையாளர்களும் நிதி வழங்கியுள்ளனர். முன்னதாக கிரிக்கெட் வீரர்கள் பேட் கம்மின்ஸ், பிரெட் லீ ஆகியோர் தனிப்பட்ட முறையில் கொரோனாவுக்காக நிவாரண நிதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
> கொரோனாவாலிருந்து குணமடைந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தோனியின் தந்தை பான் சிங், தாய் தேவகி தேவி ஆகியோர் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர். இருவரின் ரிசல்ட்டும் நெகடிவ் என வந்த நிலையில், தோனியின் பெற்றோர் வீடு திரும்பினர்.
ஊரடங்கு அப்டேட்ஸ்:
மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையன்று முழு ஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரவு நேர ஊடரங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மே 2ஆம் தேதி ஞாயிறு அன்று, முகவர்கள், வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும், ஆனால் பூஜைகள், பிராத்தனைகள், சடங்குகளை ஊழியர்கள் மூலம் நடத்தலாம்.
சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீம் பார்க்குகள் 50 சதவீத பேருடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, சலூன்கள், வணிக வளாகங்கள், பெரிய கடைகள் தொடர்ந்து இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நள்ளிரவு 12 மணி வரை கட்டுப்பாடுகள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளா?
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆட்சியர்களோடு,தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதனை அடுத்து அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமா? ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா? என்பன உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
மருத்துவ வல்லுநர் குழுவைச் சேர்ந்தோரும் ஆலோசனையில் பங்கேற்றனர். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,தேனி, திருப்பூர், உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, டிஜிபி திரிபாதி, சென்னை மாநகராட்சி ஆணையர், ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கொரோனா பரவலால் கேரளாவில் மதுக்கடைகள் மூடல்
கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டதன் எதிரொலியாக, தமிழக-கேரள எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த இரு தினங்களில் 31லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. கேரளாவில் கொரோனா பரவலால், அங்குள்ள மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டை ஒட்டியுள்ள நீலகிரியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்குவதற்காக மக்கள் குவிந்து வருகின்றனர். எல்லையில் உள்ள, வதாளூர், நம்பியார்குன்னு, அய்யன்கொல்லி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மூன்று கடைகளில் மட்டும் கடந்த இரு தினங்களில் 30லட்சத்து 50ஆயிரம் ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
டெல்லிக்கு ஆக்சிஜன் வழங்குவது தொடர்பான வழக்கு
டெல்லிக்கு ஆக்சிஜன் வழங்குவது குறித்து மத்திய அரசிடம் அறிவுறுத்தல்களைப் பெற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேறு எந்த மாநிலத்தின் நலனையும் விலையாகக் கொடுத்து டெல்லிக்கு தேவையானதைவிட கூடுதல் ஆக்சிஜனை வழங்குமாறு கூற தாங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே, டெல்லியில் கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசு அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எச்சரிக்கை
மதுரையில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் தனியார் மருத்துவமனைகளால் 5 நாள்களுக்கும், அரசு மருத்துவமனைகளால் 10 நாள்களுக்கும் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏப்ரல் 28ஆம் தேதி வரையிலான புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால், தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1068, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 1047, வீட்டுத்தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1105 என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கடந்த பத்து நாள்களின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கணித்தால் மே 5ஆம் தேதியுடன் தனியார் மருத்துவமனையின் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிடும்.
மே 9 அல்லது 10ஆம் தேதியோடு அரசு மருத்துவமனையின் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிடும் சூழல் உள்ளது என்று தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், நிலைமையைக் கைமீற விடாமல் தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மாவட்டத்தில் தினசரி பரிசோதனையின் அளவை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும், அனைத்து வகையான சந்தைகளிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த, ஒழுங்கமைக்க தனிப்பட்ட கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மதுரை எம்.பி, மதுரை கோவிட் கால நெருக்கடியை மிகச்சரியாக கையாண்டு மீண்டது என்ற நிலையை உருவாக்க அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்பும் செயல்பாடும் தேவை என்று கூறியுள்ளார்.
மலேசியாவுக்கு இந்தியாவிலிருந்து விமானங்களை இயக்கத் தடை
இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு விமானங்களை இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், சாய்னா நேவால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக பேட்மிண்டன் வரிசையில் முதல் 16 இடங்களில் இருப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலேசியா ஒபன் பேட்மிண்டன் தொடர் மே 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று வெற்றி பெறுவதன் மூலம் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் கிடம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கை உறுதி செய்யலாம் என காத்திருந்தனர். சாய்னா தற்போது 22-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் தற்போது 20-வது இடத்திலும் உள்ளனர். கொரோனா காரணமாக, இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு விமானங்களை இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இருவரும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்களை காவல் அதிகாரி தரக்குறைவாக பேசிய விவகாரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மருத்துவர்கள் இருவரை, காவல் துணை கண்காணிப்பாளர் தரக்குறைவாக பேசியதாக எழுந்த புகாரில் மதுரை மண்டல ஐ.ஜி விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டில் ஒருவார காலம் பணியாற்றுவதற்காக, மருத்துவர்கள் மணிகண்டன், விக்னேஷ் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நகர்பகுதியில் கடைக்குச் சென்றபோது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி வேல்முருகன் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார்.
அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டதால், தங்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, விசாரணை என்ற பெயரில் மூன்று மணி நேரம் அலைக்கழிப்பு செய்ததாக, மருத்துவர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து டி.எஸ்.பி வேல்முருகனிடம் கேட்டபோது, மருத்துவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறினார். ஆனால் மருத்துவர்கள் தாங்கள் மதுபோதையில் இல்லை என்பதற்கான சான்றிதழை மருத்துவமனையில் இருந்து பெற்றனர். இந்நிலையில் அராஜகமாக நடந்து கொண்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சங்கத்தினர் பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம், இதுகுறித்து மதுரை மண்டல ஐ.ஜி. இரண்டு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பண்டாரம்பட்டி கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நிராகரிக்கும் பொருட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றியதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும், பண்டாரம்பட்டி கிராம மக்கள் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி கிராம மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாசலில் கோலமிட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆக்சிஜன் தயாரிப்பு அனுமதியைத் தொடர்ந்து, தாமிர ஆலை முழுவதையும் திறந்துவிடுவார்கள் என்ற அச்சம் உள்ளதாக கூறும் பண்டாரம்பட்டி கிராம மக்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசும் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்
தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பல தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதமாகும் எனத் தெரிகிறது.
கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட பிற்பகலுக்குள் பெரும்பாலான முடிவுகள் தெரிந்துவிட்டன. ஆனால், இம்முறை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஆகலாம் அல்லது கூடுதல் நேரம் பிடிக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சமூக இடைவெளியை பிற்பற்றும் வகையில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் வழக்கமாக 20 சுற்றுக்குள் எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கை இம்முறை அதிகரித்துள்ளது. சில தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட சுற்றுகள் எண்ணப்படுகின்றன.
234 தொகுதிகளில் அதிகபட்சமாக பல்லாவரம் தொகுதியில் 44 சுற்றுகளும், செங்கல்பட்டு தொகுதியில் 43 சுற்றுகளும் அம்பத்தூர் தொகுதியில் 39 சுற்றுகளும் எண்ணப்பட இருக்கின்றன. இந்த 3 தொகுதிகளின் முடிவுகள் வெளியாக கிட்டத்தட்ட நள்ளிரவை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஓசூர், பூந்தமல்லி தொகுதிகளில் 36 சுற்றுகள் எண்ணப்பட இருக்கின்றன. இவற்றின் முடிவுகள் வெளியாக இரவு 10 மணிக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது.
நானோ தொழில்நுட்பத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் முகக்கவசம்
கொரோனா இரண்டாவது அலையில் ஆக்சிசன் பற்றாக்குறையால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் , மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த உதவிப்பேராசிரியர் ஒருவர், நானோ தொழில்நுட்பத்தில், ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் முகக் கவசத்தை கண்டுபிடித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் ஆக்சிஜனுக்கான தேவையைப்போலவே தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனை எதிர்கொள்ள, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவி பேராசிரியர் ஆரோக்கியதாஸ், நானோ தொழில்நுட்பத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பிரத்யேக முகக்கவசத்தை உருவாக்கியுள்ளார். சென்சாருடன் கூடிய முகக் கவசத்தை பயன்படுத்தும் போது, நோயாளி எவ்வளவு கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகிறார்? எவ்வளவு ஆக்சிஜன் தேவை என்பதைப்பொறுத்து ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்தையும் செல்போன் செயலி மூலம் பார்த்துக் கொள்ளும் வகையில் ஆரோக்கியதாஸ் இந்த முகக்கவசத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு மலைப்பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கும், கூட்டம் அதிகம் உள்ள ஜவுளிக்கடைகளிலும், விமானங்கள், ரயில்பெட்டிகளிலும் இந்தத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்கிறார் இந்த பேராசிரியர். தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த பிரத்யேக முகக்கவசம், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவருக்கு கொரோனா
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் மதுரை மருத்துவ கல்லூரியில் பயோகெமிஸ்ட்ரி பிரிவில் பணியாற்றிய பெண் பேராசிரியருக்கும், முதலாமாண்டு மருத்துவ மாணவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. மதுரை மருத்துவக் கல்லூரியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மாணவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளா: கொரோனா பாதிப்பால் 25 வயதான மருத்துவர் உயிரிழப்பு
கேரளாவில் முன்களப் பணியாளர்களான இரண்டு இளம்பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மகா பஷீர் என்ற 25 வயதான பெண் மருத்துவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த அவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கணவரும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல, வயநாடு பகுதியில் லேப் டெக்னீஷியன் ஆக இருந்த, அஸ்வதி என்ற இளம்பெண்ணும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வைரஸ் தொற்றுக்கு முன்பே அவர் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.