(கோப்பு புகைப்படம்)
மும்பையில் இருந்து கோவாவுக்கு வந்த மூதாட்டி முறையான கொரோனா பரிசோதனைகளில் இருந்து தப்பியது குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கோவாவில் மொத்தம் 166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 57 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பி விட்டனர். தற்போது 109 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில்தான் மும்பையில் இருந்து கோவாவுக்கு வந்த மூதாட்டி ஒருவர் கொரோனா பரிசோதனைகளில் இருந்து தப்பி சென்றிருக்கிறார்.
இதையடுத்து மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், “அவர் சோதனை தவிர்த்து மாநிலத்திற்குள் நுழைந்தார் என்பது உண்மைதான். கொரோனா உறுதியான பின்னர் அவர் பிரத்யேக கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 3,000 பேர் மாநிலத்திற்குள் நுழைகிறார்கள், எனவே அவர் எவ்வாறு சோதனையைத் தவிர்த்தார் என்பதை அறிவது கடினம்” எனத் தெரிவித்தார்.