ஆந்திராவில் இருந்து ஒடிசாவுக்கு வந்த பார்சலுக்குள் விஷப் பாம்பு இருந்ததால், இளைஞர் அதிர்ச்சி அடைந்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் ஒடிசாவில் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரைரங்பூர் பகுதியில் வசித்துவருகிறார். இவருக்கு ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து கூரியரில் ஒரு பார்சல் வந்தது. அதைத் திறந்தார் முத்து. வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளே இருந்தன. அதை எடுத்தவருக்கு அதிர்ச்சி. பார்சலின் உள்ளே நான்கடி நீளமுள்ள விஷப்பாம்பு ஒன்று புஸ்ஸென்று தலையை நீட்டிக்கொண்டு நின்றது.
இதைக் கண்டு அலறி ஓடிய முத்துக்குமரன், உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து பாம்பை பிடித்து வனத்துக்குள் கொண்டு விட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.