சில பெற்றோரின் எண்ணங்களை புரிந்து கொள்ளாத பிள்ளைகள், அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர். வீட்டில் மரியாதை இல்லாமல் இருப்பதைவிட முதியோர் இல்லத்தில் இருப்பதே மேல் என்ற எண்ணத்திலும் சிலர் முதியோர் இல்லத்தில் உள்ளனர்.
காதல், அன்பு, பாசம், இரக்கம், அரவணைப்பு என வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இத்தகைய உணர்வுகளுக்கு ஏங்காத உள்ளமே இல்லை என்று சொல்லலாம். அதிலும் முதியவர்கள் மத்தியில், முடியாத காலத்தில் நமக்கென்று யாரேனும் உதவிக்கு இருக்க மாட்டார்களா? என்ற ஏக்கம் அதிகமாகவே இருக்கும்.
காதல் என்பதற்கு வயது வரம்பு கிடையாது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையிலும் நாம் யாரையோ, எதையையோ காதலித்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மனிதர் மனிதர்மேல் கொள்ளும் காதலுக்கு சற்று மதிப்பு அதிகம் என்றே சொல்லலாம்.
இளம்ஜோடியின் பல காதல் கதைகளை நாம் பார்த்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால், இங்கு ஒரு முதியோர் ஜோடியின் காதல் கதை நாம் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறது. ஆம், எந்த ஒரு உணர்ச்சிப்பூர்வமான செயல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், உள்ளப்பூர்வமான காதலர்களாக கோச்சானியனும், லட்சுமியம்மாளும் கரம் பிடிக்கக்கூடிய காலம் நெருங்கி வருகிறது.
30 வருடங்களாக ஒருவருக்கொருவர் அறிந்திருந்தாலும் முதியோர் இல்லத்தில்தான் இவர்களின் காதல் அரங்கேறியிருக்கிறது. கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில் உள்ள ராமவர்மபுரத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. இங்குதான் கோச்சானியனும்(67), லட்சுமியம்மாளும்(66) திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து லட்சுமியம்மாள் தி நியூஸ் மினிட் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், “எனது கணவர் கிருஷ்ணா அய்யர், 21 வருடத்திற்கு முன்பு காலமானார். அவர் கேட்டரிங் தொழில் செய்து வந்தார். அவரிடம் உதவியாளராக இருந்தவர்தான் கோச்சானியன். என் கணவர் இறக்கும் தருவாயில், அவருக்கு பிறகு என்னை கவனித்து கொள்ளுமாறு கோச்சானியனிடம் கேட்டுக்கொண்டார். என் கணவர் இறந்ததும் சில ஆண்டுகள் நான் தனியாக எனது வீட்டில் இருந்தேன். எனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கோச்சானியனிடம் கேட்பேன். அவரும் உதவி செய்வார். பின்னர், எனது வீட்டை விற்றுவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டேன். அங்கு பல வருடங்கள் தங்கியிருந்தேன். கோச்சானியன் அடிக்கடி என்னை வந்து பார்த்துச் செல்வார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கோச்சானியன் எங்கேயோ சென்றுவிட்டு மீண்டும் திரும்பவே இல்லை. இரண்டு வருடத்திற்கு முன்பு நான் இந்த முதியோர் இல்லத்திற்கு வந்தேன். இரண்டு மாதத்திற்கு முன்பு கோச்சானியனை மீண்டும் இங்குதான் பார்த்தேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதற்கு முன்பு நாங்கள் காதலித்தோமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஒருவரையொருவர் விரும்பினோம் என்பது உண்மை. அவரை சந்திக்கும் முன்புவரை நான் தனிமையாக உணர்ந்தேன். அவர் என்னை ஒருபோதும் விட்டுவிடவில்லை. அவர் என்னை விரும்புகிறார். அதனால் மீதமுள்ள காலத்தில் கணவன்-மனைவியாக வாழ முடிவு செய்துள்ளோம். இது கடவுள் கொடுத்த வரம். வயதாகிவிட்டதால் எவ்வளவு காலம் ஒன்றாக வாழப்போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வோம். எனக்காக ஒருவர் எப்போதும் இருப்பார் என்று உணர்கிறேன்” என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார் லட்சுமியம்மாள்.
கோச்சானியன் சில காலம் அவரது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர், வயநாட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அதையடுத்து அங்கிருந்து லட்சுமியம்மாள் வாழ்ந்து வந்த திரிசூர் முதியோர் இல்லத்திற்கு மாற்றம் செய்யபப்ட்டார். அப்போதுதான் லட்சுமியம்மாள் கோச்சானியனை பார்த்துள்ளார்.
இவர்களின் திருமணம் திருசூர் கார்ப்பரேஷன் நிலைக்குழு உறுப்பினர் ஜான் டேனியல் தலைமையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஜான் டேனியல் கூறுகையில், “ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களின் கதையை முதியோர் இல்லத்தின் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார். அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்டார். அதனால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த திருமணத்தில் முக்கியமான அதிகாரிகள், துறை அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டபம், அவர்கள் தங்கும் அறை ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவர்களின் திருமண தாலிக்காக முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள் சிலர் நிதியுதவி செய்கின்றனர்” எனத் தெரிவித்தார்.