60 இடங்களை உள்ளடக்கிய அருணாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதையடுத்து, ஏப்ரல் 19 ஆம் தேதி, மீதமுள்ள 50 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. 50 தொகுதிகளில் 133 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் 76.44 சதவீத வாக்குகள் பதிவானதாக, தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 சட்டப்பேரவை தேர்தலில், 41 இடங்களை பாஜக பிடித்திருந்தது. ஐக்கிய ஜனதா தளம் ஏழு இடங்களையும், தேசிய மக்கள் கட்சி ஐந்து இடங்களையும், காங்கிரஸ் நான்கு இடங்களையும், அருணாச்சல் மக்கள் கட்சி ஒரு இடத்தையும் பிடித்தன. தொடர்ந்து அரங்கேறிய கட்சித்தாவல் நிகழ்வுகளால், ஆளும் பாஜகவின் பலம் 48 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், ஏற்கனவே 10 இடங்களில் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளதால், ஆட்சியை தக்கவைத்துவிடுவோம் என பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துவரும் நிலையில், அவர்களின் நம்பிக்கை பலன்தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இதேபோல், 32 உறுப்பினர்களை உள்ளடக்கிய சிக்கிம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 146 வேட்பாளர்கள் களம் காணும் நிலையில், தேர்தலில் 79.77 சதவீத வாக்குகள் பதிவானதாக, தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி 17 இடங்கைக் கைப்பற்றிய நிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு 17 இடங்கள் தேவை என்ற நிலையில், சரியாக 17 தொகுதிகளைக் கைப்பற்றி சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா ஆட்சியைப் பிடித்தது. இதனால், நடைபெற்று முடிந்த தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவ்விரு மாநிலங்களிலும் வரும் ஜூன் 2ஆம் தேதி காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும், இதற்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு, இவ்விரு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதால், அனைவரின் கவனமும் இந்த வடகிழக்கு மாநிலங்களின் பக்கம் திரும்பி உள்ளது...