புது டெல்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டிஜிட்டல் வடிவில் தேர்தல் ஆணையத்திடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கிடைத்தது மற்றும் எந்தெந்த நிறுவனங்கள் இந்த பத்திரங்களை வாங்கி அதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தன என்கிற விவரங்கள் இந்த தரவுகள் மூலம் வெளியாகியுள்ளன.
பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக என பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கிடைத்தது இந்த தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு வெள்ளிக்கிழமை வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்திருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாகவே விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்களின் பட்டியலில் ஏர்டெல் உரிமையாளரான சுனில் பாரதி மித்தலின் பாரதி குழுமம், குமாரமங்கலம் பிர்லா குழுமத்தைச் சேர்ந்த கிராசிம் நிறுவனம், என்ஆர்ஐ தொழிலதிபரான லட்சுமி மித்தலின் குழுமம், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, வேதாந்தா, முத்தூட் பைனான்ஸ், எம்ஆர்எப், பிரமல் குழுமம், மதுபான தயாரிப்பாளரான சூலா ஒயின்ஸ், மற்றும் சினிமா அரங்கங்களை நடத்தும் பிவிஆர் போன்ற பல்வேறு பிரபல தொழில்முனைவோர் உள்ளனர்.
இண்டிகோ விமான சேவை நடத்தும் இன்டர் குலோப் நிறுவனம், கட்டுமான பணிகளில் பிரபலமான டிஎல்எப், சியட் டயர் நிறுவனம், சிகரெட் தயாரிப்பாளரான ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லாப் போன்ற பல்வேறு பிரபல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியோர் பட்டியலில் இருந்தாலும், கோயம்புத்தூரைச் சேர்ந்த லாட்டரி மார்ட்டின் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனமான பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் 1368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல குவிக் சப்ளை செயின் என்கிற நிறுவனம் 410 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளது தரவுகளில் தெரியவந்துள்ளது.
வெஸ்ட்டர்ன் யூபி பவர் ட்ரான்ஸ்மிஷன் கம்பெனி என்கிற அதிகம் அறிமுகம் இல்லாத நிறுவனம் 220 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளது. இதே போல பல அடையாளம் தெரியாத நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாங்கியோர் பட்டியலில் உள்ளதால், கார்ப்பரேட் குழுமங்கள் நேரடியாக பத்திரங்களை வாங்காமல் பினாமி நிறுவனங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்திருக்கலாம் என முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேர்தல் பத்திரங்களை வாங்கியோர் விவரங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் உள்ளன. அதேபோல எந்த பத்திரங்கள் எந்த அரசியல் கட்சிக்கு கொடுக்கப்பட்டன என்கிற விவரங்களும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் பொதுப்பார்வைக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அளித்துள்ள விவரங்களை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு கூடுதல் விவரங்களை வெளியிட கோரிக்கை வைக்க வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அதே சமயத்தில் ஏற்கெனவே வழக்கு தொடுத்த அமைப்புகள், தற்போது வெளிவந்துள்ள விவரங்களின் அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் நன்கொடைக்கு கைமாறாக சலுகைகளை பெற்றெனவா என தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட காலகட்டங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றன.
குறிப்பாக குஜராத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி ஒரு பட்டியலில் உள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கினவா போன்ற விவரங்களை இவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதேபோல திரிணாமுல் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாரதிய ராஷ்ட்ரிய சமிதி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு நிதி கிட்டிய காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் சலுகைகள் கட்டியதா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.