10 நிமிடங்களில் முடிவு.. ஜெகன்மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை..!
புதிதாக வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. மேலும் ஊரடங்கு, சமூக விலகல், என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதனிடையே கொரோனா இருக்கிறதா இல்லையா என கண்டறியவே பலமணி நேரம் செலவழிக்கப்பட்டு வந்தது. இதனால் மக்கள் பலர் பயந்துகொண்டு இருந்தனர். இந்நிலையில் 10 நிமிடத்தில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியும் வகையில் ரேபிட் டெஸ்ட் கிட் என்ற கருவியை அனைத்து மாநில அரசுகளும் வாங்கிய வண்ணம் உள்ளன.
அந்தவகையில் தமிழகத்திற்கு கூட மத்திய அரசிடம் இருந்து 25 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வந்துள்ளன. இதேபோல் ஆந்திர மாநிலத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கும் வகையில், தென் கொரியாவில் இருந்து சுமார் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை ஆந்திர அரசு வாங்கியுள்ளது.
இதில் பரிசோதனை செய்து கொள்ள யாரும் தயங்கக்கூடாது எனவும் அறிகுறிகள் உள்ள அனைவரும் சோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்த முயன்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கொரோனா பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியானது. ஆந்திராவில் இதுவரை 572 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.