இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,52,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 3,128 உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில், 2,38,022 பேர் கொரோனாவிலிருந்து மீண்டிருக்கின்றனர்.
நேற்று ஒருநாளில், இந்தியாவில் 16.8 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தமாக இதுவரை 34.48 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்று உறுதிசெய்யப்படுவோர் விகிதம், 9.07 சதவிகிதம் என்றாகியுள்ளது. தொடர்ந்து 7 வது நாளாக, இந்த சதவிகிதம் 10 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது.
இதன்மூலம், இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,80,47,534 என்றும், அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,56,92,342 என்றும் ஆகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில், 91.60 சதவிகிதம் பேர் அதிலிருந்து மீண்டிருக்கின்றனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்தமாக 3,29,100 என்று உயர்ந்துள்ளது. அதனால், இறப்பு விகிதம் 1.17 சதவிகிதமாக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, 20,26,092 என்றாக உள்ளது.
கடந்த சில தினங்களாகவே இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துதான் வருகின்றது என்ற போதிலும், கடந்த 50 நாட்களில் பதிவான மிக்ககுறைவான ஒருநாள் கொரோனா பாதிப்பு இதுதான். இது மிகவும் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இரண்டாவது அலையிலிருந்து இந்தியா மீள்வதாகவே இது பார்க்கப்படுகிறது.
கொரோனாவுக்கான தீர்வான தடுப்பூசி விநியோகத்தை பொறுத்தவரை, இதுவரை 21.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கடந்த 24 மணி நேரத்தில், 10,18,076 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.