கொரோனா எதிரொலியால் இந்தியாவில் வீட்டிலிருந்து பணிபுரிவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இண்டர்நெட் வேகத்தை நெட்வொர்க் நிறுவனங்கள் அதிகரிக்க முடிவு செய்துள்ளன.
கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. உலகில் இதுவரை 3,78,414 பேரும், இந்தியாவில் 492 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் 19 மாநிலங்களில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஐ.டி நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளன. ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இண்டர்நெட் சேவையை வைத்திருக்கவில்லை. இதனால் அவர்கள் தங்கள் செல்போனில் உள்ள இண்டர்நெட் சேவையை லேப்டாப்கள் மற்றும் கணினிகளில் இணைத்து பணிபுரிகின்றனர். இதன்காரணமாக இந்தியா, சீனா உட்பட ஆசிய நாடுகளில் இண்டர்நெட் சேவை அதிகரித்துள்ளது.
இதனை சமாளிக்கும் விதமாக இந்தியாவின் நெட்வொர்க் நிறுவனங்கள் அனைத்தும் கூடுதலாக இண்டர்நெட் சேவையை விரிவாக்கம் செய்து அதன் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. இதன்மூலம் வீட்டிலிருந்து பணிபுரிவோர் வேலையை எளிமையாக செய்ய இயலும். இந்தியாவில் 630 மில்லியன், அதாவது 63 கோடி பேர் செல்போனில் இண்டர்நெட் சேவையை பயன்படுத்துகின்றனர். அதேசமயம் பிராட்பேண்ட் இணைப்பு மூலம் 19 மில்லியன் மக்கள் மட்டுமே இண்டர்நெட் சேவையை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.