இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தனது பணியாளர்களுக்கான ஊதியத்தை 50 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. அந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி வரும் ஒரு வருடத்திற்கு தனக்கு ஊதியம் வேண்டாம் எனக் கூறிவிட்டார்.
கொரோனாவை தொடர்ந்து வந்த பொது முடக்கம் இந்திய தொழில், வணிகத் துறையை கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தனது இழப்புகளை சமாளிக்க பணியாளர்களுக்கு 10 முதல் 50 சதவிகிதம் வரை ஊதிய குறைப்பை அறிவித்துள்ளது.
இது குறித்து ரீலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் ஹிட்டல் மெஸ்வானி கூறும் போது “ சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் தேவை குறைந்து விட்டதால் ஹைட்ரோ கார்பன் வணிகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்த பாதிப்பை சரிகட்ட நிர்வாக இயக்குனர்கள், மூத்த இயக்குனர்களின் சம்பளமானது 30 சதவீதத்திலிருந்து 50 வரை குறைக்கப்படும்.
ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளவர்களுக்கு ஊதியக் குறைப்பு எதுவும் இருக்காது. ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வாங்குபவர்களுக்கு 10 சதவிகிதம் ஊதியம் குறைக்கப்படும். இது தவிர போனஸ், ஊக்கத் தொகை உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2018 - 2919 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் சம்பளம் 15 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.