உலகிலேயே மிக பிரமாண்டமான தடுப்பூசி போடும் திட்டம் இந்தியாவில் இன்று தொடங்கப்படவுள்ளது. பிரதமர் மோடி இத்திட்டத்தை தொடங்கிவைக்க உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் இன்று தொடங்கப்படுவதால் விவரங்களைப் பெறும் கட்டணமில்லா தொடர்பு எண்ணை அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில் இந்தியாவில், இத்திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. டெல்லியில் பிரதமர் மோடி இத்திட்டத்தைத் தொடங்கிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி தரப்பட்டுள்ள நிலையில், அவை முதல் கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக போடப்படவுள்ளன.
அதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு மற்றும் தனியார் துறை சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் ஆகியோருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட உள்ளது.
இதுவரை நாடெங்கும் பல்வேறு நகரங்களில் உள்ள 3,006 மையங்களுக்கு ஒரு கோடியே 65 லட்சம் தடுப்பூசிகள் விமானப்படை, சரக்கு விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் மூலம் கொண்டுசென்று சேர்க்கப்பட்டுள்ளன.
மாநிலங்களின் மக்கள் தொகை மற்றும் பாதிப்பு விகிதாச்சாரப்படி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை உள்ள குளிர்பதன பெட்டியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
முதல் நாளான இன்று நாடெங்கும் உள்ள சுமார் 3 லட்சம் மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள உள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு ஊசி போடும் இடமும் நேரமும் மொபைல் போன்மூலம் ஒரு நாளுக்கு முன்பே அனுப்பப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மையத்திலும் தினசரி சராசரியாக 100 பேருக்கு ஊசி போடப்படும் என்றும், பின்னர் இவை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்த விவரங்களை பெற 1075 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் அரசு அறிவித்துள்ளது.