கொரோனா விரைவு செய்திகள் மே 20 : தினசரி கொரோனா பாதிப்பு டூ கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் வரை

கொரோனா விரைவு செய்திகள் மே 20 : தினசரி கொரோனா பாதிப்பு டூ கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் வரை
கொரோனா விரைவு செய்திகள் மே 20 : தினசரி கொரோனா பாதிப்பு டூ கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் வரை
Published on

1. தமிழகத்தில் 18 முதல் 44 வரையிலான வயதினருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

கொரோனாவை ஒழிக்கும் பேராயுதம் தடுப்பூசி என்ற மந்திரத்தை கையில் எடுத்துள்ளது மத்திய, மாநில அரசுகள். மே 1ஆம் தேதி முதல் 18 முதல் 44 வரையிலான வயதினருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், போதியளவு தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தமிழகத்தில் அத்திட்டம் செயல்படுத்த முடியவில்லை. பின்னர் 7ஆம் தேதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதும், இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு நேரடியாக தடுப்பூசி தயார் செய்யும் நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை வாங்கத் தொடங்கியது.

அதன்படி, சீரம் நிறுவனத்திடம் இருந்து 8 லட்சத்து 96 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 1 லட்சத்து 66 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும் வாங்கப்பட்டது. மொத்தத்தில் 10 லட்சத்து 62 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்புடன் தமிழகத்தில், 18 முதல் 44 வரையிலான வயதினருக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிவித்தபடி தொடங்கியது.

திருப்பூரில் 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முகாமில் 20 பயனாளர்களுக்கு செவிலியர் தடுப்பூசி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், திருப்பூரை சேர்ந்த பல்வேறு தொழில்துறையினர் சுமார் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலைகளை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்தனர்.

அடுத்தடுத்த நாட்களில் இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக 31ஆம் தேதியன்று மேலும் 3 லட்சத்து 23 ஆயிரத்து 60 டோஸ் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வரவுள்ளன.

2. தனியார் ஆய்வகங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான கட்டணம் ஆயிரத்து 200ரூபாயில் இருந்து, 900 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைப்படி அரசு மற்றும் அரசால் பரிந்துரைக்கப்படும் மாதிரிகளை தனியார் ஆய்வுக்கூடங்களில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்கு கட்டணம் 800 ரூபாயில் இருந்து 550ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. குழு மாதிரிகளுக்கான கட்டணம் 600 ரூபாயில் இருந்து 400ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட பயனாளியாக இல்லாதவர்கள், தனியார் ஆய்வுக்கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யக் கட்டணம் 900ரூபாயாகவும், வீட்டிற்கே சென்று பரிசோதனை மேற்கொள்வதற்கான கட்டணம் 1,200ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளில் செய்யப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான தொகையினை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மறுபரிசீலனை செய்த பிறகு வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை மூன்று நாட்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் புதிய உச்சமாக மீண்டும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ஒரே நாளில் மீண்டும் அதிகரித்து புதிய உச்சமாக 35 ஆயிரத்து 579ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 17 லட்சத்து 34 ஆயிரத்தை கடந்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட ஆயிரத்து 299 சிறார்கள் ஒரே நாளில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 25 ஆயிரத்து 368 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 14 லட்சத்து 52 ஆயிரத்து 283 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து 397 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து 6ஆவது நாளாக 300க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியிருக்கின்றன. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது. இணை நோய் இல்லாத 97 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 73 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 335 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 92 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 791 பேரும், திருப்பூரில் ஆயிரத்து 581 பேரும் ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்து 505 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

4. வசிப்பிடங்களில் காற்றோட்டம் நன்றாக இருந்தால், கொரோனா பாதிக்கப்பட்டவரிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் குறையும் என மத்திய அரசு தனது புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை மோசமாக பரவி வரும் சூழலில், வைரஸ் பரவல் தடுப்பு, தற்காப்பு குறித்து மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் வீடு மற்றும் அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நன்றாக இருந்தால் தொற்று பரவாமல் பாதுகாத்திடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜன்னல் கதவுகளை திறந்து வைத்திருக்கவும், வெண்டிலேட்டர் போன்றவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடு, அலுவலகங்களில் வெளிக்காற்று உள்ளே வரும் வகையில் அறைகளை வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் காற்றோட்ட வசதியையும் இணைத்து தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

5. தமிழகத்தில் 9 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் குணமடைந்து வரும் நிலையில், இந்த நோய் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சை நோய் புதிதான நோய் அல்ல. இந்த பூஞ்சை தொற்று இதற்கு முன்னரும் இருந்திருக்கிறது. சராசரியாக ஆண்டுக்கு 10 பேருக்கு ஏற்படும் கருப்பு பூஞ்சை பாதிப்பு, தற்போது வாரம் 10 பேர் என்ற அளவில் கண்டறியப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது வரை 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 9 பேர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கருப்பு பூஞ்சை நோய் குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும், இதுகுறித்து கண்காணிக்க மருத்துவக் கல்வி இயக்குனர் தலைமையில் பத்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வட மாநிலங்களில் தினசரி 70,000 முதல் 80,000 மருந்துகள் தேவைப்படும் அளவிற்கு இந்நோயின் தாக்கம் உள்ளது. தமிழகத்தில் தற்போது தான் சுமார் 40 பேர் வரை இந்நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருந்து வணிகர்கள் தெரிவிக்கின்றனர். வரும் நாட்களில் தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரிக்கலாம் என்பதால் அரசுக்கு உடனடியாக நோயாளிகள் தெரியப்படுத்த வேண்டிய பட்டியலில் மியூகார்மைகோசிஸ் இணைக்கப்பட உள்ளது. இந்நிலையில், காது,மூக்குதொண்டை மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், நரம்பியல் மருத்துவர்கள் உள்ளிட்டோரை இந்த பூஞ்சை தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், ஆம்போடெரிசின் பி மருந்தினை கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

6. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை அச்சுறுத்தும் விதமாக மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்புப்பூஞ்சை நோய் தாக்குவது தெரியவந்துள்ளது. மகாராஷ்ட்ரா, பீகாரைத்தொடர்ந்து தமிழகத்திலும் இந்த பாதிப்பு தலையெடுத்துள்ளது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஆரோக்கிய உணவும், நோய் எதிர்ப்புத்திறனை வலுப்படுத்துவதும் மிகவும் அவசியம் என்பது மருத்துவர்களின் முக்கிய அறிவுறுத்தலாக இருக்கிறது.

7. கருப்பு பூஞ்சை நோயை, தொற்று நோயாக மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், தொற்றிலிருந்து மீண்டவர்களையும் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. கடுமையான தலைவலி, கண்களில் வீக்கம், பார்வை குறைதல், சைனஸ் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் இந்த கருப்பு பூஞ்சை நோயை தொடக்கத்திலேயே கண்டறியாவிட்டால், பார்வை குறைபாடு ஏற்படும். இந்த நிலையில், அனைத்து மாநில அரசுகளும், கருப்பு பூஞ்சை நோயை, 1897 ஆம் ஆண்டு தொற்றுநோய் சட்டத்தின் கீழ், தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளும், கருப்பு பூஞ்சை நோய் தொடர்பாக ஐசிஎம்ஆர் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

8. கொரோனா தடுப்பு பணிகளுக்காக இரண்டாயிரத்து 100 சுகாதாரப் பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நாளுக்கு நாள் தீவிரமாகும் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட கொரோனா சிகிச்சை மையங்களையும், படுக்கைகளையும் அரசு பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த மையங்களில் பணியாற்ற மாநிலம் முழுவதும் இரண்டாயிரத்து 100 சுகாதாரப் பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் பணியமர்த்த மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணையும் வெளியிட்டுள்ளது. இவ்வாறு நியமிக்கப்படும் சுகாதாரப் பணியாளர்கள் 6 மாதங்களுக்கு பணியில் இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 60,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியமர்த்தப்படக் கூடிய 2,100 சுகாதார அலுவலர்கள் தேவைக்கேற்ப மாவட்டங்களில் நியமிக்கப்படுவர் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் கருவியின் பயன்பாட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது

கொரோனா இருப்பதை விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் என்ற சாதனத்தை மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து தொற்று இருப்பதை வீட்டிலேயே உறுதி செய்யும் வகையில் இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பரிசோதனையை எல்லாரும் கண்மூடித்தனமாக செய்து விடக்கூடாது என தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், தொற்று அறிகுறிகள் உள்ளோரும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோரும் மட்டும் இக்கருவியை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது. இக்கருவி மூலம் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அது உறுதியாக பாசிடிவ் என்றே கருதப்படும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. ஆனால் அறிகுறிகள் இருந்து இக்கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகடிவ் என வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை செய்ய வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. இந்த சோதனையை மேற்கொள்ள வசதியாக மொபைல் ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

10. தமிழக மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க, ஐஏஎஸ் அதிகாரி தாரேஸ் அகமது தலைமையிலான குழு அமைத்துள்ள தமிழக அரசு, அரசாணையும் வெளியிட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் ஆக்சிஜன் வினியோகத்தை கண்காணிக்க குழு அமைத்திடுமாறு உச்சநிதிமன்றமும் மத்திய அரசும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் தாரேஸ் அகமது தலைமையில் ஆக்சிஜன் விநியோக கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் ஆணையராகவும் தரேஸ் அகமது செயல்படுவார். மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் செயலாளர் மீனா , பெட்ரோலிய எரிபொருள் பாதுகாப்பு அமைப்பு அலுவலர் சஞ்சனா ஷர்மா ஆகியோர் மத்திய அரசு பிரதிநிதிகளாக குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும் சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையின் மயக்கவியல் துறை தலைவர் உறுப்பினர் செயலராகவும் ஸ்டான்லி மருத்துவமனையின் மயக்கவியல் துறை தலைவர் உறுப்பினராகவும் செயல்படுவார்கள்.

11. சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக கடந்த 6 நாட்களில் மட்டும் 21ஆயிரம் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் தினமும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றுபவர்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஊரடங்கு விதிகளை பின்பற்றாததால் சென்னையில் ஆறு நாட்களில் 17ஆயிரத்து 602வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் நேற்று மட்டும் 4ஆயிரத்து 772வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். உயரதிகாரிகளின் உத்தரவிற்குப் பின்னரே வாகனங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

12. தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு தேவையான 900 மெட்ரிக் டன் கூடுதல் மருத்துவ ஆக்சிஜனை மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அனுப்ப மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை, தி.மு.க. மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு நேரடியாக சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினார். அதில், தமிழகத்தில் தினசரி 180 டன் ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. புயல் உள்ளிட்ட காரணிகளால் முன்னெச்சரிக்கையாக ஆக்சிஜன் இருப்பு வைப்பது அவசியம் என்பதால், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து தினமும் 180 மெட்ரிக் டன் மருத்துவம் தமிழகத்திற்கு உடனடியாக வழங்கிட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மகாராஷ்டிராவிலிருந்து ஐந்து நாட்களுக்கு தமிழகத்திற்கு தேவையான 900 மெட்ரிக் டன் கூடுதல் மருத்துவ ஆக்சிஜனை அனுப்புவதற்கு பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

13. சேலத்தில் மயங்கி விழுந்த மூதாட்டிக்கு, கொரோனா அச்சமின்றி உதவிய இளம்பெண் இளையராணியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி சுசீலாவை, அவரது மகன் பாலமுரளி இருசக்கர வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, அந்த மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். கொரோனா அச்சத்தால் மூதாட்டியை தூக்குவதற்கு கூட யாரும் முன்வராத நிலையில், இளம்பெண் இளையராணி என்பவர் மூதாட்டியின் மகன் உதவியுடன் அவரை தூக்கி இருசக்கர வாகனத்தில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து புதிய தலைமுறையிலும் செய்தி வெளியானது. இந்நிலையில் சேலத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளம்பெண் இளையராணியை நேரில் சந்தித்து, அவரது தைரியத்தையும் மனித நேயத்தையும் பாராட்டி, புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

14. வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவப் பணியை தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பயிற்சி பெறும் வகையில் ஓராண்டு பணி புரிந்த பின்பே மருத்துவப் பணி என்ற விதியும், வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின் போது 5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதியும் அமலில் உள்ளது. இந்நிலையில் 5 லட்சம் கட்டணம் மட்டும் செலுத்தி விட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு பயிற்சியை தொடங்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பயிற்சியின் போது கொரோனா தொற்று பரவலுக்கும் சிகிச்சை அளிக்க இந்த உத்தரவு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்களின் பற்றாக்குறை மற்றும் தேவை கருதி தமிழக அரசு இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் liposomal amphotericin b மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள மருந்துதான். ஆனால் கொரோனா பரவலால் வட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள நிலையில் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. இம்மருந்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதற்கேற்ப மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி வருவதாக கூறுகிறார் சென்னை மாவட்ட மருந்து வணிகர் சங்கத் தலைவர் ரமேஷ்.

தமிழகத்தில் இம்மருந்து கிடைப்பதில்லை என்பது சமூகவலைத்தளங்களில் கோரிக்கையாகவும், புகாராகவும் முன்வைக்கப்படுகிறது. தவிர, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளான டெக்சாமெத்தசோன், மீத்தேல் பிரெண்ட்சலோன், ஹெப்பாரின் , இரத்தக்கட்டு ஏற்படுவதை தடுப்பதற்கான இனாக்சிபெரின், பீடிரோசைட் எனப்படும் இன்ஹேலர் மருந்து ஆகியவற்றிற்கும் தமிழகத்தில் ஆங்காங்கே தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளதாக கூறுகிறார் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்.

கொரோனா மருந்துகளைப் பொறுத்தவரை ரெம்டெசிவிர், டோசிலிசுமாப் ஆகிய 2 மருந்துகளுக்குக் மட்டுமே கடுமையான தட்டுப்பாடு உள்ளதாகவும், மற்ற மருந்துகளைப் பொறுத்தவரை தயாரிக்கும் இடத்தில் இருந்து வந்து சேர்வதில் ஒரு சிறிய தாமதம் உள்ளதே தவிர, தட்டுப்பாடு என்று சொல்லும் நிலை தற்போது இல்லை என்றும் கூறுகின்றனர் மருந்து வணிகர்கள். நகர்ப்புறங்களிலேயே இம்மருந்துகள் தேவைக்கு ஏற்றவாறு உடனடியாகக் கிடைப்பதில்லை என்பதால், கிராமப்புறங்களின் நிலை கேள்வியாக நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com