லண்டனில் இருந்து டெல்லி வந்த 266 பயணிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் லண்டன் உள்ளிட்ட தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. ஏற்கெனவே உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாக புதிய வகை வைரஸ் பரவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் மீண்டும் அதிகமான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. உருமாறிய புதிய வகை வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக ஐரோப்பிய நாடுகள் பலவும் பிரிட்டனுக்கான வான்வழி மற்றும் தரைவழி எல்லையை மூடிவிட்டன.
இதையடுத்து பிரிட்டனில் இருந்து டெல்லி வரும் விமானங்களை தடை செய்யக் கோரி, மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்திருந்தார். அதனடிப்படையில், பிரிட்டன் விமானங்கள் இன்று நள்ளிரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 11.59 வரை இந்தியா வர தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், லண்டனில் இருந்து டெல்லி வந்த 266 பயணிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.