கொரோனா மரணங்களை கணக்கிட உலக சுகாதார அமைப்பு கூறும் நடைமுறைகளை பின்பற்றுவது கடினம் என இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் அண்மையில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அதில், கொரோனா இறப்புகளை கணக்கீடு செய்வதில் சிக்கல்கள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில நாடுகள் தரும் கொரோனா இறப்பு விவரங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் உலக சுகாதார அமைப்பு, இந்தியா போன்ற சில நாடுகளில் ஏற்பட்ட மரணங்களை கணிதவியல் கோட்பாடுகள் அடிப்படையில் அளிக்க கூறுகிறது" என விமர்சித்துள்ளது.
இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த, வெவ்வேறு புவியியல் அமைப்பு கொண்ட ஒரு நாட்டில், கணிதவியல் முறையில் கொரோனா மரணங்களை கணக்கிடுவது சரியாக இருக்காது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா மரணங்களை கணக்கிடுவதற்கான உலக சுகாதார அமைப்பின் நடைமுறையுடன் இந்தியா முரண்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.