தற்கொலை செய்யப்போவதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபரை சாமர்த்தியமாக காப்பாற்றிய போலீஸார்

தற்கொலை செய்யப்போவதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபரை சாமர்த்தியமாக காப்பாற்றிய போலீஸார்
தற்கொலை செய்யப்போவதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபரை சாமர்த்தியமாக காப்பாற்றிய போலீஸார்
Published on

ஊரடங்கு அமலில் உள்ளதால், வீட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டதாக 27 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அதைப் பார்த்த அயர்லாந்தைச் சேர்ந்த ஃபேஸ்புக் ஊழியர் ஒருவர் டெல்லி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன்பேரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சரியான நேரத்திற்கு போலீஸார் சென்று அந்த நபரைக் காப்பாற்றியுள்ளனர்.

அந்த நபர் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து அவரது வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போவதாக பல வீடியோக்களை பதிவிட்டு வந்திருக்கிறார். இதனை கவனித்த ஃபேஸ்புக் நிறுவனம் நேரடியாக அந்த நபரைத் தொடர்புகொண்டால் அவர் தற்கொலைத் திட்டங்களை விரைவுப்படுத்தக்கூடும் என கருதியுள்ளனர்.

எனவே ஃபேஸ்புக் கணக்கை உருவாக்க அந்த நபர் பயன்படுத்திய தொலைபேசி எண் டெல்லியைச் சேர்ந்ததாக இருக்கவே, சனிக்கிழமை இரவு 8 மணியளவில், டெல்லி போலீஸ் துணை கமிஷ்னர் (சைபர்) அனீஷ் ராயை தொடர்புகொண்டு அவரது தற்கொலை நடவடிக்கை பற்றிய விவரங்களை மின்னஞ்சலில் பகிர்ந்துள்ளனர்.

அதிலிருந்து போலீஸ் அந்த நபரை தேடும் பணியில் இறங்கினர். முதலில் அந்த எண் கிழக்கு டெல்லியில் வசிக்கும் ஒரு பெண்ணுடையது என கண்டுபிடித்தனர். உடனே ராய், கிழக்கு கமிஷ்னர் ஜஸ்மீத் சிங்கை தொடர்புகொண்டு முகவரியை அனுப்பியிருக்கிறார்.

அங்கு சென்று விசாரித்தபோதுதான், அந்த பெண்ணின் கணவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருடன் சண்டையிட்டுக்கொண்டு மும்பை சென்றுவிட்டதாகவும், அவருடைய ஃபேஸ்புக் கணக்கை கணவர்தான் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் மும்பையில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் சமையல்காரராக பணிபுரிந்து வருவதாகவும், முகவரி தெரியவில்லை எனவும் அந்த பெண் தெரிவித்தார்.

அத்துடன் அந்த நபரின் எண் அன்ரீச்சபிளில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் அதற்குள் 4 வீடியோக்களை தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவிட்டிருந்தார். இரவு 11 மணியிலிருந்து 12.30 மணிவரை தொலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்துள்ளனர்.

அந்த நபர் அவரது தாயாருக்கு அழைத்திருக்கிறார். அதை கவனித்த போலீஸார் அவரது தாயாரிடம் அவருக்கு வீடியோ கால் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அதன்மூலம் அவர் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அவர் ஒரு ரிங்கிலேயே துண்டித்துவிட்டார். திரும்ப அந்த நபர் வேறு ஒரு எண்ணிலிருந்து தாயாருக்கு அழைத்துள்ளார். அதைவைத்து இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். எந்தவொரு தீவிர முடிவும் எடுத்துவிட வேண்டாம் என ஒருமணிநேரம் ஒரு போலீஸார் அவரிடம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். இரவு 1.30 மணியளவில் அவரது முகவரியைக் கண்டுபிடித்த போலீஸ் குழு அவருக்கு நேரில் சென்று ஆலோசனை வழங்கியுள்ளது.

ஊரடங்கால் சில மாதங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், தனது மனைவி சண்டையிட்டதாகவும், இப்படியிருந்தால் புதிதாகப் பிறந்த குழந்தையை எப்படி வளர்க்க முடியும் எனவும் தான் கவலைப்பட்டதால், வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவெடுத்ததாக அவர் கூறியுள்ளார். தற்கொலை ஒரு தீர்வல்ல என்பதை போலீஸார் எடுத்துக்கூறி அவரது முடிவை கைவிட வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com